Breaking News

28 அமைச்சர்களை தெரிவுசெய்வதில் நெருக்கடி!

புதிய அரசாங்கத்தில் நியமனம் பெறும் அமைச்சர்கள் இன்று (24) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மேலதிகமாக அமைச்சரவையில் 28 உறுப்பினர்களைப் பெயரிடுவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. எனினும், இதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியமான நான்கு அமைச்சுப் பதவிகளைக் கோரியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.10ஆவது அரசியலமைப்பின் 46 (1) (அ) மற்றும் (ஆ) பிரிவிற்கமைய முழு அமைச்சரவையின் எண்ணிக்கை 30ஐத் தாண்டக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோரின் எண்ணிக்கை 40ஐத் தாண்டக் கூடாது எனக் கூறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து அமைச்சு, பிரதி அமைச்சுக்களின் எண்ணிக்கை 70ஐத் தாண்டக் கூடாது என்ற நோக்கத்தில் தற்போது பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த எண்ணிக்கைவிட அமைச்சரவை அதிகரித்தால் தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படலாம் என பிரதான கட்சிகளின் தலைவர் இருவரும் கருதுவதாகத் தெரியவருகிறது.

இதற்கமைய 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் 46 (3) பிரிவிற்கமைய நாடாளுமன்றம் கூடிய பின்னர், அதன் அனுமதியுடன் அமைச்சரவையை விரிவாக்க இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

19ஆவது திருத்தத்தின் பின்னர் நடத்தப்படும் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறும் இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவினால், நாடாளுமன்றம் கூட்டப்பட்டு அதன் அனுமதியுடன் அமைச்சரவையை 70 முதல் 100 பேர் வரை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய அமைச்சரவை அமைச்சர்கள் 45 பேரும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் 55 பேரும் மொத்தமாக பதவி வகிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.