ஐ.நா விசாரணை அறிக்கை – கூட்டமைப்புக்கு அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழி
போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, அமெரிக்கா முன்னின்று செயற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நேற்றுக்காலை நடந்த சந்திப்பின் போதே, தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிடுகையில்,
‘நிஷா பிஸ்வால் மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் ஆகியோரை சந்தித்திருந்தோம்.
இதன் போது, இப்போது நடந்திருக்கும் ஆட்சி மாற்றம், அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் அனைத்துலக விசாரணை அறிக்கை மற்றும் புதிய அரசாங்கம் எவ்வாறு இந்த பொறுப்புக் கூறல் விடயங்களில் நடவடிக்கை எடுக்கப்போகிறது, இதில் எமது எதிர்பார்ப்புகள் என்ன, என்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம்.
உடனடியாக செய்ய வேண்டிய மூன்று விடயங்கள் தொடர்பாக நாம் வலியுறுத்தியுள்ளோம்.
குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திய போதிலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்காது உள்ளது. எனவே, உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
அதேபோல் எமது மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். ஆட்சி மாற்றத்துடன் எமது மக்களின் சொந்த காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தது. இந்த விடயமும் இன்னும் தாமதமாகி வருகின்றது. எனவே எமது நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அதேபோல் காணாமல் போனோர் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று விடயங்களை நாம் வலியுறுத்தினோம்.
இந்த மூன்று விடயங்களையும் அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அடுத்தமாதம் வெளிவரவிருக்கும் அனைத்துலக விசாரணை அறிக்கை நடவடிக்கைகளுக்கு அப்பால் இந்த மூன்று விடயங்களுக்கும் உடனடியாக தீர்வு காணும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கத்திடம் தாம் ஆலோசனைகளை முன்வைப்பதாக எமக்கு உறுதியளித்துள்ளனர்.
ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவந்தவுடன் அதில் குறிப்பிடப்படும் பரிந்துரைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்க முன்னின்று செயற்படும் என்று கூறப்பட்டது.
இந்தத் தடவையும் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் எமக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர். பொறுப்புக்கூறல் விடயத்தில் அனைத்துலக விசாரணை ஒன்றே அமைய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம்.
அதேபோல் அரசியல் தீர்வு தொடர்பில் உடனடியாக அரசாங்கத்துடன் பேச்சுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நாம் இவர்களிடத்தில் தெரிவித்தோம்.இவை எல்லாவற்றுக்கும் முன்னர், நாம் முன்வைத்திருக்கும் முக்கியமான மூன்று விடயங்களை உடனடியாக செய்ய வேண்டும்.
இன்னும் தாமதப்படுத்துவது அர்த்தமற்றது என்பதை நாம் இந்தப் பேச்சுக்களில் வலியுறுத்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார். நேற்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.