திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியை அண்மித்த வீதியில் மனித நடமாட்டத்திற்குத் தடை
மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை அண்மித்துள்ள வீதியில் மனித நடமாட்டத்திற்கு தடைவிதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.இதன்போது காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணத்தை கவனத்திற்கொண்ட நீதவான், நேற்று புதைகுழி அமைந்துள்ள பகுதியில் இருந்ததாகக் கூறப்பட்ட கிணற்றை அடையாளப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இதற்கமைய, பொலிஸார் மற்றும் நில அளவையாளர் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் நேற்று கிணறு அடையாளம் காணப்பட்டது.இதனையடுத்து, தடயங்கள் அழிந்து போகாமல் கிணற்றையும், புதைகுழியை அண்மித்த பகுதியிலுள்ள வீதியினதும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.
கடந்த வருடம் அந்த பகுதியில் நீர்க்குழாய்களைப் பொருத்துவதற்கான அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களால் அந்த இடத்தில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து, நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் அந்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், 80 க்கும் அதிகமான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இந்த மனித எச்சங்கள் தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.