Breaking News

பிரகீத் கடத்தலில் இராணுவத்தின் தொடர்பு – பதிலளிக்க மறுத்தார் இராணுவத் தளபதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாடடுகள் தொடர்பாக கருத்து வெளியிட மறுத்துள்ளார்  இராணுவத் தளபதி.

பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக, இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு இராணுவ அதிகாரிகள், மற்றும் ஒரு ஓய்வுபெற்ற ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், இந்தச் சம்பவத்தில்  இராணுவ அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக  இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கருத்து வெளியிட மறுத்த  இராணுவத் தளபதி, இந்தச் சம்பவம் தொடர்பான காவல்துறை நடத்தி வரும் விசாரணைகளுக்கு  இராணுவம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகளைக் கைது செய்வதற்கு  இராணுவத்தளபதியும், பாதுகாப்புச் செயலரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.