இன்று 27 அமைச்சர்கள் பதவியேற்பர்
இலங்கையின் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் 27 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும்.
எனினும், ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில், அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டால் மாத்திரமே இன்று அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது தொடர்பாக நேற்றிரவு வரையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் தொடர்பேச்சுக்களை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக நியமிக்கப்படும் 30 பேர் கொண்ட அமைச்சரவையில், பெரும்பாலும் ஐதேகவுக்கு 17 இடங்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 13 இடங்களும் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.