தேசிய அரசாங்கத்திற்கு தடையாக எதிர்க்கட்சி! என்கிறது ஐ.தே.க
நாட்டில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்க்கட்சியே பெரும் தடையாக உள்ளது. எனவே, தேசிய அரசாங்கத்தை நிறுவுவதானது எதிர்க்கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது. எதிர்க்கட்சியின் தீர்மானத்துக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்க்கட்சி இணங்காவிடின் ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைக்கவும் தயாராக உள்ளது. மேலும் நாட்டின் நலனை கருத்தில்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் எமக்கு ஆதரவு வழங்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களுக்கான பதவியேற்பு இன்று அல்லது நாளை இடம்பெறலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாஷிம் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றது.
ஆகவே எமக்கு ஆட்சி அமைப்பதற்கு எதிர்க்கட்சியின் ஆதரவு ஒருபோதும் அவசியம் ஏற்படாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய ஆதரவும் எமக்கு தேவைப்படாது. 120 ஆசனங்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு நல்குவதற்கு எமக்கு பலர் எதிர்க்கட்சி தரப்பில் உள்ளனர்.
இருந்தபோதிலும் நாட்டின் நலனை கருத்திற் கொண்டே தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது. நாட்டிற்கு தேவையான பல்வேறு வேலைத்திட்டங்களை தேசிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கவுள்ளோம். ஆகவே பெரும்பான்மை ஆசனங்கள் இருந்தபோதிலும் நாட்டின் நலனை கருத்திற் கொண்டே தேசிய அரசாங்கம் அமைத்து ஒருமித்த கொள்கையுடன் செயற்பட இருந்தோம்.
இதற்காக நாம் தயார் நிலையில் இருக்கின்றோம். அத்துடன் இது தொடர்பில் எமது நிலைப்பாட்டையும் நாம் அறிவித்துவிட்டோம். ஆனாலும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதற்கு இடையூறு விளைக்கும் வகையில் செயற்படுகின்றது. அமைச்சு பதவிகளை பகிர்வதில் குழப்பம் விளைவிக்கின்றனர். எவ்வாறாயினும் இன்று அல்லது நாளை அமைச்சு பதவி வழங்கவுள்ளோம்.
இந்நிலையில் தேசிய அரசாங்கம் அமைத்து நாட்டிற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பானஇறுதி சிறிலங்கா சுதந்திரக் கடசியின் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடமிருந்து சாதகமான முடிவு கிடைக்கபெறும். இல்லையேல் தனியாக ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி சந்தர்ப்பம் உள்ளது.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு சிறந்த வாயப்பு கிடைத்துள்ளது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவும் எமக்கு அவசியமாகும். எமக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் 120 ஆசனங்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை கொண்டு செல்வோம் என்றார்.