பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குக – கபே
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தனிநபர் சுதந்திரத்தை மிகவும் மோசமான முறையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாதித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான அடக்குமுறைச் சட்டமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை அடக்கி ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்திக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.கால வரையறையின்றி சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய இந்த சட்டம் பயன்படுத்திக் கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இந்த சட்டம் நாட்டில் சிவில் சட்டத்தை அமுல்படுத்த தடையாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தை ரத்து செய்யவும் அதிகாரமற்றதாகவும் தற்போதைய புதிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் கோரிக்கை விடுத்துள்ளார்.