இலங்கை அரசின் முயற்சிகள் திருப்தி – மைத்திரியிடம் நிஷா பிஸ்வால்
இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நேற்று மாலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், நிஷா பிஸ்வாலுடன், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் ஆகியோரும் பங்கேற்றனர்.
இலங்கை ஜனாதிபதியடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும், கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகருமான ஒஸ்ரின் பெர்னான்டோ உள்ளிட்டோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, ஜனநாயகம், அமைதி, நல்லிணக்கத்தை் ஏற்படுத்துவதற்கான இலங்கை ஜனாதிபதியின் முயற்சிகளை நிஷா பிஸ்வால் பாராட்டியுள்ளார்.
ஜனநாயகம், அமைதி நல்லிணக்கத்தை் ஏற்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்துலக சமூகத்துக்கு பெரியளவிலான திருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நிஷா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தியதற்காக, அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் சார்பில், இலங்கை ஜனாதிபதிக்கு நிஷா பிஸ்வால் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்டுள்ள, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுடன் இயல்பான- பயனுள்ள உறவுகளை பேண தமது அரசாங்கம் விரும்புவதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்புறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், நிஷா பிஸ்வால் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இன்று காலையில் அவர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.