கூட்டமைப்பு - நிஸா பிஸ்வால் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொழும்பில் இன்று சுமார் ஒன்றறை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கை குறித்து பேசப்பட்டதாக அத தெரணவிடம் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிஸா பிஸ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
கடந்த தேர்தலை நியாயமானதும் மற்றும் சுதந்திரமானதுமான முறையில் நடத்தியமை குறித்து நிஸா பிஸ்வால் தனது பாராட்டுக்களை இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்வரும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டினுள் சமாதானம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்பத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
நேற்றையதினம் இலங்கைக்கு விஜயம் செய்த நிஸா பிஸ்வால் நேற்று காலை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.