சிவாஜியால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிராகரிப்பு?
இலங்கை தீவில் உள்ள தமிழ்,சிங்கள மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அழைக்க வேண்டும்
என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சபை அமர்வில் முன்மொழியப்பட்ட பிரேரணை அவைத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. அதன்போது ஆரம்பத்தில் சிவாஜிலிங்கம் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தாமதமாக சபைக்கு வருகை தந்த அவர் குறித்த பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் தனது பிரேரணையை முன்வைத்த போது அதனை எவரும் வழிமொழியாத காரணத்தினால் அந்த பிரேரணையை அவைத் தலைவர் நிராகரித்துள்ளார்.
எனினும், குறித்த பிரேரணையை மீண்டும் அடுத்த அமர்விலும் சமர்ப்பிக்கவுள்ளதாக சிவாஜிலிங்கம் சபையில் தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்வரும் ஆறு மாதக் காலத்திற்கு அந்த பிரேரணையை சபையில் முன்வைக்க முடியாது என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.