சம்பூர் மீள்குடியேற்றத்திற்கு அமெரிக்கா நிதி!
சம்பூர் மீள்குடியேற்றம் மற்றும் அம் மக்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களை மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிஸா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று காலை வௌிவிவாகர அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார். வௌிவிவகார அமைச்சில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டபோதே நிஸா பிஸ்வால் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் நல்லாட்சியினூடான இலங்கையின் ஜனநாயகத்தை நோக்கிய பயணத்திற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த விஜயத்தின் போது, தான் உள்ளிட்ட குழுவினர் சிவில் அமைப்புக்கள் மற்றும் அரச அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை நிஸா பிஸ்வாலின் இந்த விஜயத்தினால் அமெரிக்க மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு மேலும் வலுப்படும் என, இதன்போது கருத்து வௌியிட்ட வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.