வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இலங்கையிடம் வலியுறுத்துவார் நிஷா
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தவே அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று கொழும்பு வரவுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற இலங்கையின் புதிய அரசாங்கம், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நம்பகமான விசாரணைப் பொறிமுறை ஒன்ற உருவாக்குவதாகவும், அதற்கு காலஅவகாசம் வழங்கும் வகையில், ஐ.நா விசாரணை அறிக்கையை பிற்போடுமாறும் கோரியிருந்தது.
இதற்கமைய, கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த ஐ.நா விசாரணை அறிக்கை செப்ரெம்பர் வரை பிற்போடப்பட்டது. எனினும், இலங்கை அரசாங்கம் இதுவரை உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதை இழுத்தடித்திருந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், செப்ரெம்பருக்கு முன்னர் நம்பகமான விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதாக அமெரிக்காவுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நிஷா பிஸ்வால் இலங்கை அரச தரப்பிடம் வலியுறுத்துவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கைக்கான பயணத்தை் முடித்துக் கொண்டு நாளை நிஷா பிஸ்வால் புதுடெல்லிக்கும் சென்று பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடததக்கது.