Breaking News

மாவை சேனாதிராசாவுக்கு மீண்டும் ஓர் அன்புமடல்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு வணக்கம். 

மிக அண்மையில் ஒரு மடல் எழுதியிருந்தேன். ஒருசில தினங்களுக்குள் அடுத்த மடலையும் எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டமைக்காக நம் மீது குறை விளங்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன். தமிழ் அரசியல் புலத்தில் தங்களுக்கு இருக்கக் கூடிய உயர்வான இடத்தை மதிக்கின்றோம். எனினும் தங்களின் கட்சித் தலைமை என்பதை தாங் கள் நிலை நாட்டுவதில் மெத்தனப்போக்கை கடைப் பிடிப்பது போன்ற நிலைமை தெரிகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு தூணாக கருதக்கூடிய பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களை தேசியப் பட்டியலில் முதன்மை வேட்பாளராக நியமித்து விட்டு, அவருக்கு ஆசனம் கொடுக்காமல் ஏமாற்றியமை இலங்கைத் தமிழரசுக் கட்சி செய்த மகா துரோகத்தனமாகும். 

இதேபோன்று தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய அருந்தவபாலனுக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படும் என அனைவரும் நம்பியிருந்த நிலையில் அவரையும் ஓரம் கட்டியமை நியா யமானதா? என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். 

எதுவாயினும் சம்பந்தமானவரும் அவரோடு சேர்ந்தவரினதும் தலைமையில் யாழ்ப்பாணம்-கிளிநொச்சித் தேர்தல் மாவட்டங்கள் அடியோடு புறக்கணிக்கப்படும் என்பதை மட்டும் அடித்துக் கூற முடியும். இதுமட்டும் அல்ல; மிக விரைவில் தங்களையும் அவர்கள் ஓரம் கட்டுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தனக்குப் பின்பான தலைமையை தெரிவு செய்துவிட்டார். அந்தத் தலைமை நீங்கள் அல்ல என்பது நிறுத்திட்டமான உண்மை. நாம் இதைக் கூறும்போது எங்கள் மீது நீங்கள் குறை கொள்ளலாம்.

ஆனால் கடந்த காலங்களில் இவ்விடத்தில் நாம் எழுதியவற்றை நீங்கள் நடுநிலையோடு ஆராய்ந்து பார்ப்பீர்களாயின் உண்மை தெரியவரும். எதுவாயினும் வடபுலம் மாவை சேனாதிராஜாவின் தலைமையையும் பறி கொடுக்கத் தயாரில்லை. ஆகையால் இலங்கைத் தமிழரசுக் கட்சியை உங்கள் கையில் எடுங்கள். 

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாழ்வுக்காக பாடுபட்ட பேராசிரியர் சிற்றம்பலத்தை தூக்கி எறிந்த சம்பந்தப்பட்ட தரப்பு உங்களையும் தூக்கி எறிவதற்கு எவ்வளவு நேரமாகும். பேராசிரியர் சிற்றம்பலத்திற்கு ஆதரவாக கையயழுத்திட்ட யாழ்.பல்கலைக்கழக கல்வியாளர்களை ஏமாற்றியது மட்டுமன்றி; பேராசிரியரை நம்ப வைத்து, அவரின் தலைமையில் பிரசாரக் கூட்டங்களை நடத்திவிட்டு ஈற்றில் அவரின் வயது நிலையையும் கருத்தில் எடுக்காது- எவரும் எதிர்பாராத வகையில் அவரை ஏமாற்றியமைதான் பிரதேச வாதத்தின் உச்சம் எனலாம். 

எதுவாயினும் வடக்கின் முதல்வர், நீதியரசர் விக்னேஸ்வரனை தலைவராகவும் தங்களை செயல் அதிபராகவும் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியை அவசரமாகப் புனரமைப்புச் செய்யுங்கள். இல்லையேல் பேராசிரியருக்கு நடந்ததுதான் உங்களுக்கு நடக்கும். அத்துடன் தமிழ் அரசியல் தலைமையில் வடக்குத் தமிழர்களின் பங்கும் பறி போகும்.