மங்கள, விஜயதாச, சுவாமிநாதன் அமைச்சர்களாக பதவியேற்றனர்
வெளிவிகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவியேற்றுள்ளனர்.
ஏனைய அமைச்சர்கள் நாளை (25) பதவியேற்கவுள்ளனர். சர்வதேச மாநாடுகளில் பங்கேற்க உள்ளமையினால் இவ்வாறு அவசரமாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இதற்கு முன்னர் 100 நாள் அரசாங்கத்திலும் இவர்கள் இதே பதவிகளை வகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதற்காகவே இவ்வாறு அவசரமாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் நாளை (25) இலங்கைவரவுள்ளார். இதனால் வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர இன்று முன்கூட்டியே பதவியேற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.உத்தியோகபூர்வ பயணமாக நிஷா தேஷாய்பிஷ்வால் இலங்கை பயணிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதும் அவரது பயணத்தின் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது.இந்த பயணத்தின் போத ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரையும் நிஷா தேஷாய் பிஷ்வால் சந்திப்பார் என வெளிவிவகார அமைச்சுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.