எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எஸ்.பி.திசநாயக்க – மகிந்த அணியை பலவீனப்படுத்த திட்டம்
இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள பங்காளிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு, மகிந்த ராஜபக்ச தனியான அணியாக- எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டால், எஸ்.பி .திசநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவராக முன்னிறுத்த மைத்திரிபால சிறிசேன தரப்பு திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, நிமால் சிறிபால டி சில்வா அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ள இணங்கினால், சுசில் பிரேமஜெயந்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது குறித்த யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ள போதிலும் அந்தக் கட்சியின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளனர்.
கட்சித் தலைமையின் முடிவுக்கு மாறாக நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே எச்சரித்துள்ளார்.இந்த நிலையில், கட்சித் தலைமையின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.