தேசிய அரசாங்கத்தில் தமிழ் கூட்டமைப்பு இணைய வேண்டும்! சம்பந்தனுக்கு சங்கரி கடிதம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.
இவ் வேண்டுகோள் 60 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் பணி செய்து கொண்டு இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் எவரிலும் பார்க்க கூடுதலாக நேசிக்கும் ஒருவரிடம் இருந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியாததல்ல. குறிப்பிட்ட ஒருசிலரை தவிர மற்றும் அனைவரும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்ததோடு மட்டுமல்லாமல் பல உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து எல்லாவற்றிற்கும் மேலாக பல ஆண்டுகள் மன வேதனையுடன் வாழ்ந்தார்கள். அப்போது ஓர் அமைதியான புரட்சி ஏற்பட்டு எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு பல்வேறு பிரச்சினைகள் உண்டு, ஆனால் அவற்றை எல்லாம் ஒரே நாளில் அல்லது ஒரு சில நாட்களில் தீர்த்து விட முடியாது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து இரு ஆண்டுகள் நடத்தவுள்ள தேசிய அரசாங்கத்தில் நிச்சயமாக பலவற்றிற்கு தீர்வு காணமுடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விரைவாக ஓர் முடிவை எடுத்து தேசிய அரசாங்கத்தில் இணைய வேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். அதற்காகவே அவர்கள் வாக்குகளையும் அளித்துள்ளனர். பல விதமான கொள்கைகளை கொண்டுள்ள 30 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் இணைந்த இவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளமையால் இந்த விடயத்தை மிக கவனமாக கையாள வேண்டிய கடமைப்பாடு உங்களுக்கு உண்டு.
ஆரம்பத்தில் இருந்தே மாதுலுவாவேசோபித்த தேரர், ஒமல்பேசோபித்த தேரர், அத்துரலிய ரத்னதேரர் போன்ற சமயப் பெரியார்களும் மற்றும் சந்திரிக்கா பண்டாரநயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன போன்ற அரசியல் பிரமுகர்களும் தாம் இனப்பிரச்சினை தொடர்பில் ஏற்புடைய தீர்வை பெற்றுத் தருவதாக மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளனர். நீங்கள் அவர்களை நம்பவேண்டும் என்பதையும், தேசிய அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் எனது ஆலோசனையாகத் தெரிவிக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக அரை நூற் றாண்டுகளுக்கு மேலாக தீர்வு காண முடி
யாதிருந்த இனப்பிரச்சினைக்கு இச் சந்தர்ப்பத்தில் தீர்வுகாணக் கூடிய வாய்ப்பை நழுவவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள் கின்றேன்.