புதிய அமைச்சரவை இன்று பதவியேற்காது
இலங்கையில் தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று பதவியேற்க வாய்ப்புகள் இல்லை என்று ஐதேக பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 30 பேர் இன்று முதற்கட்டமாக பதவியேற்கவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துடைய 19 அமைச்சர் பதவிகளை ஐதேகவும், 16 அமைச்சர் பதவிகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பெறுவதென் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில், யாருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவது என்பது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கப்படாத நிலையிலேயே, இன்று அமைச்சரவை பதவியேற்பு இடம்பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், அமைச்சரவையில் இடம்பெறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்க கூட்டணியில் இணைய வேண்டும் என்றும், எதிர்க்கட்சியில் இடம்பெற்றால் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் ஐதேக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 30 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஐதேகவைச் சேர்ந்த 16 பேரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 பேரும் இடம்பெறுவர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 14 இடங்களில், ஐதேகவின் தேசியப் பட்டியல் உறுப்பினரான எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, ஐதேகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கை அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக இருக்க வேண்டும் என்று 19ஆவது திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் நிலையில், மேலதிக அமைச்சர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். எனவே, அமைச்சரவையில் இடம்பெறும் ஏனைய அமைச்சர்கள் தொடர்பாக வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் நாடாளுமன்றம் கூடிய பின்னரே முடிவெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.