புதிய அரசு தமிழ் மக்களை ஏமாற்றக் கூடாது - ஆயர்கள், சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் கருத்து
புதிய அரசாங்கம் வாக்குறுதிய ளித்ததைப் போன்று தமிழ் மக்க ளின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வை துரிதமாக முன்வைக்க வேண்டும். வெறுமனே காலத்தைக் கடத்தி தமிழ் மக்களை ஏமாற்றக்கூடாது.
அதே போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வைக் காண வேண்டும் இத்தருணத்தை கூட்டமைப்பு தவற விடுமானால் எதிர்காலத்தில் மற்று மொரு ஆணையை மக்களிடம் கோரமுடியாது போகும்.
இவ்வாறு ஆயர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள், புலம்பெயர் அமைப்புக்கள் பரவலா கத் தமது கருத்துக்களை முன்வைத் துள்ளன.நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கில் வெற்றிவா கைசூடி நாட்டில் மூன்றாவது பெரும்பான்மை அணியாக விளங்குவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.
திருகோண மலை மாவட்ட தமிழர் அபிவிருத்தி ஒன்றிய தலைவரும் மாவட்ட ஆயருமான நோயல் இம்மானுவெல் கருத்துத் தெரிவிக்கையில், இன்று இருபிரதானகட்சிகளும் ஒன்று கூடிய முறையில் புரிந்துணர்வு அடிப்படையில் நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் கொண்டுவர வேண்டுமென்ற இலக்குடன் செயற்படவுள்ள சூழ்நிலையில் இந்த நல்ல சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு பயன்படுத்தி நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக் காண முயல வேண்டும்.
அரசியல் தீர்வுக்கு அப்பால் வேலை வாய்ப்பு, கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் யுத்தகாலத்தில் கடத்தபட்டவர்கள், போரினால் விதவையாக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், விடுவிக்கப்படாது சிறையில் வாடும் இளைஞர்கள் சார்பாகவும் கூடிய கவனம் செலுத்துவதுடன் காணி, மீள்குடியேற்றம் சார்பாகவும்உரிய நடவடிக்கைகளை கால தாமதம் செய்யாமல் மேற்கொள்ளவேண்டும் என்றார்.
மட்டுநகர் மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா கருத்துக் கூறுகையில் ,
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வடகிழக்கில் த.தே.கூ. அமைப்பு உறுப்பினர்கள் இனியாவது அரசியல் தீர்வுக்கான முடிவைக்காண துணிய வேண்டும். யாருடனும் சேரமாட்டோம் எவருடனும் கைகோர்க்கமாட்டோமென்ற வரட்டு வாதத்தை கைவிட்டு இணைந்து பெற முயற்சிக்க வேண்டும்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூ. அமைப்பின் சார்பில் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையைப் பொறுத்தவரை படிப்படியாக இழந்து போகும் அவலநிலையே காணப்படுகிறது. இதே நிலை தான் அம்பாறை மாவட்டத்திலும் நிலவுகின்றது.
மக்கள் அதிகூடிய அளவு வாக்களித்திருப்பார்களானால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. மட்டு. மாவட்டத்தில் 40 வீத மக்கள் வாக்களிக்கவில்லை. காலத்தை நீடிக்காமல் விரைவில் ஒரு தீர்வைப்பெற்று அமைதியுடன் கூடிய அதிகார வலுவடைய அபிவிருத்தி ஒட்டிய தீர்வைப் பெற வேண்டும். இல்லையாயின் மக்களின் சினத்துக்கும் அவநம்பிக்கைக்கும் ஆளாக வேண்டிய நிலை உருவாகும் என்பதை த.தே.கூ. உணர வேண்டும் என்றார்.
கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன் தனது கருத்தை தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் அளித்திருக்கும் ஆணையென்பது அவர்கள் கூட்டமைப்பில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது திட்டத்தை இருவிதமாகவோ அல்லது மூன்றுவிதமாகவோ வகுக்கவேண்டும்.
குறுகிய கால திட்டம், மற்றையது நீண்ட காலத்திட்டம்
குறுகிய காலத்திட்டம் என்கின்ற போது தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் இதற்கு எந்த விதமான தீர்வும், சகாயமும் கிடைக்கவில்லை.
முக்கியமாக காணி பிரச்சினை, விசாரணையின்றி சிறையில் வாழும் இளைஞர்களின் விடுதலை, காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை, அதே போல் மக்களின் மீள் குடியேற்றம் இது போன்ற அன்றாடப் பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் தீர்வு காணப்படவில்லை.
அதைவிட வடகிழக்கு மாகாணங்களில் நல்ல முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் மற்றும் வருமானம் பெறக்கூடிய இந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இத்தகைய அடிப்படை பிரச்சினைகளுக்குப் புதிதாக வந்திருக்கும் அரசாங்கத்துடன் நல்லிணக்க அடிப்படையில் பேச்சு வார்ததை நடத்தி குறி்ப்பிட்ட காலத்திற்குள் தீர்க்க முயற்சி செய்யவேண்டும் . இவற்றுக்கு காலவரையறை ஒன்றை ஏற்படுத்தி அந்த காலவரையறைக்குள் செய்துமுடிக்கவேண்டும்.
இரண்டாவது விடயம், மாகாணசபையின் அதிகாரங்களை முழுதையாகப்பெற முயற்சிக்க வேண்டும். புதிய அரசியல் சீர்த்திருத்தற்கு காத்திராமல் இது உடன் செய்யப்படவேண்டிய கடப்பாடு, பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்க வேண்டும்.
மூன்றாவது நீண்டகால திட்டமாக இருக்க வேண்டியது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதாகும். அதனை சரியாக ஆராய்ந்து புதிதாக அமைந்துள்ள அரசாங்கத்துடன் பேசித் தீர்க்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாம் பெறக்கூடியதை பெறவேண்டும். இதை மேலே குறிப்பிட்ட மூன்று திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்வது சிறந்ததாகும். நீ்ண்டகால திட்டத்தை சமஷ்டி முறையை அல்லது அதற்கு இணையாக வரக்கூடிய ஒன்றை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த நம்பிக்கையை வைத்துத்தான் தமிழ் மக்கள் தமக்கெனப் பேரம் பேசும் சக்தியாக கூட்டமைப்பு இருக்க வேண்டுமென வாக்களித்துள்ளார்கள்.
இவற்றை விட மேலும் ஒரு யுக்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்ற வேண்டும். அல்லது உபாயமாக கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்று வருகின்ற போது முஸ்லிம் மக்களுடைய நல்லுறவை பேணாமல் வட கிழக்கு இணைப்பை கொண்டு வருவது கஷ்டமாக இருக்கும். சிங்கள மக்களிடையேயும் நம்பிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டிவளர்க்க வேண்டும். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் எமது அரசியல் தீர்வை நீண்டகாலத்தில் பெறுவது கடினமாக இருக்கும்.
இவை பேணப்படாத பட்சத்தில் எந்தவொரு இலக்கையும் அடைவது கடினமாகிவிடும். தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டவர்களாகவே ஆகிவிடுவார்கள் என்றார்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் கருத்துத் தெரிவித்த போது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் த.தே.கூ. தான் என்பதை இந்த தேர்தல் மூலமும் மக்கள் நிரூபித்துள்ளனர். மக்களுடைய ஆணையைப் பெற்ற கூட்டமைப்பு, மக்களின் உடனடிப் பிரச்சினைக்குத் தீர்வைக்காண உழைப்பதுடன் நிரந்தரத் தீர்வை விரைவாக எட்டவேண்டிய தேவையுள்ளது.
மக்களிடம் அடிக்கடி சென்று அவர்களின் தேவைகள் தொடர்பிலும், பிரச்சினைகள் தொடர்பிலும் நாட்டம் காட்ட வேண்டும். இனியும் தொலைபேசிகளை முடக்கி, கொழும்பை தஞ்சமாகக் கொள்ளும் நிலைமை மாறவேண்டும். முன்னாள் போராளிகள் விவகாரம், காணமல் போனோர், விடயம் தொடர்பாக விடுபடாத காணிகள் சம்பந்தமாக விரைவாகத் தீர்வு காண மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும் என்றார்.
இதே கருத்தையே மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமூக சிவில் அமைப்புச்சார்ந்த டாக்டர் தோமஸ் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழ் அமைப்பு பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு வினவிய போது அவர்கள் கூறுகையில்,
வரலாற்றில் மீண்டுமொரு சந்தர்ப்பம் த.தே.கூ. அமைப்புக்கு வழங்கப்படவுள்ளது. இச்சந்தர்ப்பம் கைநழுவிப் போகுமாயின் இன்னுமொரு சந்தர்ப்பத்தை நாம் பெறமுடியாமல் போய்விடும். அது மாத்திரமின்றி மக்கள் முன் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே கூட்டமைப்பு மக்களோடு மக்களாக அவர்களின் அபிலாஷைகளை அனுமானித்தவர்களாக இருக்க வேண்டும். வெற்றியின் பின் தொலைந்து போனவர்களாகஇ மக்களை மறந்தவர்களாக இருப்பார்களாளால் மக்களால் அவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும்.
தேர்தல் காலத்தில் மக்களிடம் சென்றவர்கள், எக்காலத்திலும் இதையொரு புனித கடமையாக மேற்கொள்ளவேண்டும். மக்களை உதாசீனம் செய்வது தொலைபேசிகளை முடக்கி தப்பித்துக் கொள்வது, மக்களின் பிரச்சினைகளை கேட்டும் கேளாமலும் பார்த்தும் பாராமலும் நடந்து கொள்வது தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
மீண்டும் மக்களிடம் செல்லக்கூடிய சகல வழிகளையும் வெற்றிபெற்றவர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகுமென கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.