பொதுத் தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை!
இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் நாடாளு மன்றத் தேர்தல் நியாயமாகவும் வெளிப்ப டைத் தன்மையுடனும், சம்பந்தப்பட்ட அனைவ ருக்கும் திருப்தியேற்படுத்தும் விதத்திலும் நடந்து முடிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களின் அறிக்கை தெரிவித் துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களுக்கு இந்தத் தேர்தலைப் பார்வையிட இலங்கைத் தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் பேரில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 85 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கைக்குச் சென்று இந்தத் தேர்தலைக் கண்காணித்தது.இந்தத் தேர்தல் தொடர்பாக ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்வதற்கும் துண்டுப் பிரசுரம் கொடுப்பதற்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆனால், நிதி தொடர்பாக போதுமான கட்டுப்பாடுகள் இல்லையென்றும் சில வேட்பாளர்கள் 5 லட்சம் யூரோக்கள் வரை செலவழித்தனர் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
பெண்கள் பங்களிப்பு குறைவு
பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில், அதாவது வெறும் 9 சதவீதம் அளவுக்கே இந்தத் தேர்தலில் போட்டியிட்டதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கலாச்சாரக் காரணங்கள், சமூக பொருளாதாரக் காரணங்கள், முந்தைய தேர்தலைகளில் நடைபெற்ற வன்முறை, பிரச்சாரத்திற்கான செலவை வேட்பாளரே செய்ய வேண்டியிருப்பது போன்ற காரணங்களால் பெண்கள் அதிக அளவில் போட்டியிட முடியவில்லையென இந்த அறிக்கை கூறுகிறது.
தேர்தல் வன்முறை
தேர்தல் பிரச்சாரத்தில் மன்னார் மாவட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தன்னுடைய போட்டியாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
இலங்கைத் தேர்தல் சட்டத்தின் படி, தேர்தலில் செலவழிக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லாததும் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டியில்லாததும் சில வேட்பாளர்கள் பெரும் அளவில் பணத்தைச் செலவழிக்க வழிவகுத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பணம் கொடுப்பதில்லை என்பதால், அதிகம் செலவழிக்கக்கூடிய திறன் கொண்ட வேட்பாளர்களால் மட்டும் பெரிய அளவில் பிரச்சாரங்களைச் செய்ய முடிவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வாக்கெடுப்பைப் பொறுத்தவரை மிக அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. அதே போல வாக்கு எண்ணிக்கையும் மிக அமைதியான முறையிலேயே நடைபெற்றது என இந்த அறிக்கை கூறியிருக்கிறது.