Breaking News

இலங்கை வருகிறார் நிஷா – ஐ.நா அறிக்கைக்கு முன் அமெரிக்கா அதிரடி

தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னதாக, இலங்கை அரச தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக நிஷா பிஸ்வால் கொழும்பு வரவுள்ளார். கொழும்பு வரும் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் செவ்வாய் காலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து பேச்சு நடத்துவார்.

நிஷா பிஸ்வாலின் பயணத்துக்கு முன்னதாக, மீண்டும் வெளிவிவகார அமைச்சராக, மங்கள சமரவீர பொறுப்பேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மங்கள சமரவீரவைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் நிஷா பிஸ்வால்.

நிஷா பிஸ்வாலின் பயணம், சிலவாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்ததாயினும், சிறிலங்காவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலினால், அது பிற்போடப்பட்டிருந்தது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில், நிஷா பிஸ்வாலின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

அதேவேளை, நிஷா பிஸ்வாலின் இந்தப் பயணம், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் பயணத்தின் தொடர்ச்சியான ஒன்று என இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜோன் கெரி தனது பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில், அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு கூட்டுறவு விவகாரங்களில், பங்காளர் கலந்துரையாடலை மேற்கொள்வது தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மே மாதம், ஜோன் கெரியுடன் நிஷா பிஸ்வாலும் கொழும்பு வந்திருந்தார். அதேவேளை, கடந்த புதன்கிழமையே தனது பணியைப் பொறுப்பேற்பதற்காக கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் புதிய தூதுவர் அதுல் கெசாப், கடந்த வெள்ளிக்கிழமை, தனது நியமனப் பத்திரங்களை இலங்கை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.

வழக்கத்துக்கு மாறாக, அமெரிக்கத் தூதுவரின் நியமனப் பத்திரங்களை மிக விரைவாக இலங்கை ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நிஷா பிஸ்வாலின் பயணத்துக்கு முன்னதாக, புதிய அமெரிக்கத் தூதுவர் பதவியேற்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதாலேயே விரைவாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.