கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனத்தை ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமைக்கு வழங்குங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைமைக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குமாறு வடமாகாண பொது அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியுள்ளன.
வடமாகாண மீனவர் தொழிலாளர் சங்கம், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், முத்தமிழ் கடற்றொழிலாளர் சங்கம், நீர்வேலி வடக்கு, அச்சுவேலி விவசாய சம்மேளனங்கள், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களின் சமாசம், பருத்தித்துறை இளைஞர் கழகம், மன்னார் மாவட்டத்தின் மீனவர் சங்கங்களின் சமாசம், உதைபந்தாட்ட லீக் , சமாதான அமைப்பு, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசம், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பனை, தென்னை கூட்டுறவுச் சங்கம், அச்சுவேலி மயான அபிவிருத்திச் சபை, இந்து இளைஞர் மன்றம், சங்கானை மாதர் சங்கம், அறிவகம்,வடமராட்சி சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு மையம் மற்றும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு சனசமூக நிலையங்கள் ஆகிய அமைப்புக்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இவ்வமைப்புக்கள் கூட்டமைப்பின் தலைமைக்கு அனுப்பி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டிதற்கு எமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது மக்கள் நிரந்தரமாக இம்மண்ணில் தலைநிமிர்ந்து அனைத்து தரப்பினருடனும் சமமாக கைகோர்த்து நடப்பதற்கான தமது விருப்பத்தை வாக்களிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர். இதில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்பு அளப்பரியது என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
எதிர்பாராத விதமாக கூட்டமைப்பின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் அங்கத்துவக் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பின் வெற்றியில் அவரது பங்களிப்பு கணிசமாக இருந்ததைத் தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.கூட்டமைப்பின் ஜனநாயகத்தைக் காப்பதற்கும் அவரது குரல் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் ஒலிப்பதற்கும் தாங்கள் உரிய நடவடிக்கையை எடுப்பீர்கள் என்று நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.
பொது அமைப்பின் பிரதிநிதிகளான நாம் தேசியப் பட்டியல் ஆசனத்தில் ஒன்றை சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு அளித்து கூட்டமைப்பின் ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் காப்பீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மிகவும் நெருக்கடியான காலம்தொட்டு இன்றுவரை அவர் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளதை கவனத்தில்கொண்டு அவருக்கு அப்பதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகளின் கூட்டிணைவு என்பதால் கிடைத்திருக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் இரண்டும் கூட்டமைப்புக்குச் சொந்தமானது என்பதை கவனத்தில் கொண்டு ஒரு கட்சியின் தலைவர் தோல்வியடைந்திருப்பதால் தாங்களாகவே முடிவெடுத்து அவருக்கு தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தைக் கொடுப்பீர்கள் என்று உங்கள்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.
தாங்கள் அவ்வாறு நடந்துகொள்ளாமையால் நாங்கள் இக்கடிதத்தை எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதையும் தங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.எனவே, தாங்கள் சற்றும் தாமதியாமல் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு ஆச னத்தை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க் கின்றோம் என்றுள்ளது.