வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் இடத்திற்கு புதிய உறுப்பினர்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லவுள்ள நிலையில் அவர்களின் இடத்திற்கு புதிய உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்படவுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் யாழ்.மாவட்ட உறுப்பினராக இருந்த சித்தார்த்தன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக இருந்த சிவமோகன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
இவர்களின் இடத்திற்கு புதிய உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய மாகாண சபையின் அடுத்த இரு உறுப்பினர்களாக யாழ் மாவட்டத்தில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஷ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
முன்னாள் மாகாண சபையின் உறுப்பினர்களான யாழ்.மாவட்ட உறுப்பினரான சித்தார்த்தன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரான சிவமோகன் ஆகிய இருவரும் தமது மாகாணசபை உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தினை வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரிடம் கையளித்துள்ளனர்.
குறித்த இரு மாகாண சபை உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதம் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரினால் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆணையாளரின் பதில் கடிதம் அவைத் தலைவருக்கு கிடைக்கப்பெற்றதும் விருப்பு வாக்கில் அடுத்தடுத்து நிலையில் உள்ளவர்களுக்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த கனகசுந்தரசுவாமி சுகயீனம் காரணமாக உயிரிழந்ததனை அடுத்து வடக்கு மாகாண சபைதேர்தலில் போட்டியிட்டு விருப்பு வாக்கில் அடுத்து இருந்த முல்லைத்தீவினை சேர்ந்த சிவநேசன் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.