புலிகளுக்கு நிதி வழங்கியிருந்தால் 3 வருடங்களில் முடிக்க முடியுமா? மஹிந்த கேள்வி
பாராளுமன்றத் தேர்தலில் நாம் 117 ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படும்
என்று ஐக்கிய தேசியக்கட்சி கூறியதிலிருந்து அவர்கள் பெரும்பான்மையைப் பெறப்போவதில்லையென்பதை ஏற்றுக்கொண்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு யார் ஆயுதம், பணம் வழங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். 2005ஆம் ஆண்டு நான் புலிகளுக்கு நிதி வழங்கியிருந்தால் மூன்று வருடங்களில் அவர்களை முடிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. சமஷ்டிக்கோரிக்கைக்கு நாம் இணங்கப்போவதில்லை. மாகாணசபைகளின் அதிகாரங்களை அதிகரிப்பதாயினும் அது குறித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடவேண்டும். அரசியலமைப்பு மாற்றப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு ஜே ஹில்ட்டன் ஹோட்டலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா, தலைவர்களான விமல் வீரவன்ச, தினேஷ்குணவர்த்தன, ஜி.எல். பீரிஸ், ரிரான் அலஸ், ரஜீவ விஜயசிங்க, உட்பட பலரும் கலந்து கொண்டனர். இங்கு மஹிந்தராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது:-
2005 ஆம் ஆண்டு எம்மிடம் நாட்டை ஒப்படைத்த போது நாடு எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும் 2015 ஆம் ஆண்டு நாட்டை மீளவும் நான் ஒப்படைக்கும் போது யுத்தத்திற்கும் முடிவைக்கண்டு சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றப்பாதையில் ஒப்படைத்தேன். கடந்த ஆறு மாதகாலத்தில் நாடு பின்னோக்கிச் சென்றுள்ளது.
கேள்வி:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்குமுா?
பதில்:- நாம் 117 ஆசனங்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 113 ஆசனங்களுக்கு மேல் நாம் எப்படியும் பெற்று ஆட்சி அமைப்போம்.
கேள்வி:- 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலைப்புலிகளுக்கு நீங்கள் நிதி வழங்கியதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை என்ன?
பதில்:- விடுதலைப் புலிகளுக்கு நான் நிதி வழங்கியிருந்தால் மூன்று வருடங்களில் அவர்களுக்கு முடிவுகட்ட சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது. நான் நிதி வழங்கியதாக ரணிலுக்கு பிரபாகரன்தான் கூறியிருக்கவேண்டும். தற்போது பிரபாகரன் இல்லாததால் அதனை கேட்க முடியாது. விடுதலைப்புலிகள் ஆரம்பித்த காலம் முதல் நான் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவன். புலிகளுடன் அண்மித்திருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். நாம் அவர்களுடன் இருதடவைகள் பேசுவதற்கு முனைந்தோம். ஆனால் அவர்கள் மாவிலாறு யுத்தத்தை ஆரம்பித்ததனர். இதனால் அவர்களை முடித்தோம். யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் அதனையும் மீறி ஆரம்பித்தனர். அதனால் முடித்துவிட்டேன்.
புலிகளுக்கு ஆயுதம் பணம் கொடுத்தவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். இந்திய அமைதிப்படைக்காலத்தில் அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்ததற்காக ஆயுதங்கள் நிதி உதவிகள் எவ்வளவு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் அனைவருமே அறிந்துள்ளனர்.
கேள்வி:- நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானால் மூன்று மாதங்களில் விலகிவிடுவீர்கள் என்று கூறப்படுகின்றதே?
பதில்:- யார் அப்படி சொன்னது? உங்களது சொல்லிருந்து நான் பிரதமராவேன் என்பது நீங்கள் ஏற்றுக்கொள்வது தெரிகின்றது.
கேள்வி:- ஐக்கிய தேசியக்கட்சி தேசிய அரசாங்கம் அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து உங்களின் கருத்தென்ன?
பதில்:- ஐக்கிய தேசியக்கட்சியின் கூற்றிலிருந்து அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பது நிரூபனமாகின்றது. நாம் பெரும்பான்மை பலத்தைப் பெற்று வெற்றிபெறுவோம். ஐக்கிய தேசியக்கட்சியானது தமிழ்தேசியக்கூட்டமைப்புடனும், ஜே.வி.பி.யுடனும் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக கூறுகின்றது. இதிலிருந்து அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பது தெரிகின்றது. தோல்வியை ஏற்றுக்கொண்டமையினாலேயே அவர்கள் கூறுகின்றனர்.
இதன் போது விமல் வீரவன்ச கருத்துத் தெரிவிக்கையில்:-
தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும் என்று 19 ஆவது திருத்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரணில் ஆட்சியினை உருவாக்க முடியாது என்று தெரிவித்தார்.
கேள்வி:- 10 வருடங்களாக ஜனாதிபதியாக இருந்தபோது செய்ய முடியாததை தற்போது செய்யவுள்ளதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றமை பொய்யென்று ஆளும் தரப்பில் கூறப்படுகின்றதே?
பதில்:- 2005 ஆம் ஆண்டு நாம் 300 ரூபாவிற்கு உரம் வழங்குவோம் என்று வாக்குறுதி வழங்கினோம். அப்போது அதனை எல்லோரும் பொய்யென்றனர். ஆனால் அதனை நாம் செய்து காட்டினோம்.
கேள்வி:- சந்திரிக்கா குமாரதுங்க பிரசார மேடைகளில் உங்களை கடுமையாக தாக்கிவருகின்றாரே?
பதில்:- எவரைத்தான் அவர் தாக்கவில்லை. அவர் குறித்து நான் பேசுவதற்கு விரும்பவில்லை.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜந்த சந்திரிக்கா குமாரதுங்க தனது ஆட்சிக்காலத்தில் ஒரு வருட நீடிப்பை மேற்கொள்வதற்கு முயன்றார். ஆனால் அது முடியவில்லை. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அவர் மறைமுகமாக ரணிலுக்குத்தான் ஆதரவு கொடுத்தார். ஆகவே இதுவொரு புதிய விடயமல்ல என்று தெரிவித்தார்.
கேள்வி:- அப்படியானால் சந்திரிக்கா குமாரதுங்கவை ஏன் கட்சியில் தொடர்ந்தும் வைத்திருக்கின்றீர்கள்?
பதில்:- இப்போது அதனை சர்ச்சையாக்க விரும்பவில்லை. அவர் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
கேள்வி:- நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானால் ஜனாதிபதியுடன் எவ்வாறு செயற்படுவீர்கள்?
பதில்:- நல்ல இணக்கத்துடன் செயற்படுவேன்.
.கேள்வி:- உங்களைப் பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்காமல்விட்டால் ?
பதில்: அதனை 18 ஆம் திகதி பார்த்துக்கொள்வோம்.
கேள்வி:- தேர்தலில் உங்களது அணி வெற்றிபெற்ற பின்னர் மறுதரப்பிற்கு பல உறுப்பினர்கள் மாறிவிடுவார்கள் என்று கூறப்படுகின்றதே?
பதில்:- அப்படியான சந்தேகம் எமக்கில்லை. அப்படி யாரும் போவதாக தெரியவில்லை.
கேள்வி:- நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானால் மஹிந்த சிந்தனை தொடருமா?
பதில்:- அது அப்படியே இருக்கும் கடந்த ஆறு மாத காலத்தில் மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்ந்தே தற்போதைய தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் வெளியிட்டுள்ளோம். மஹிந்த சிந்தனையிலுள்ள நல்ல விடயங்களை அமுல்படுத்துவோம்.
கேள்வி:- ஆட்சிக்கு வந்தால் சமஷ்டியை அமுல்படுத்துவீர்களா?
பதில்:- எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது குறித்து நாங்கள் தெரிவித்துள்ளோம். ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
கேள்வி:- மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரம் கேட்டால் வழங்குவீர்களா?
பதில்:- இது குறித்து பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவேண்டும். இதனையே கருத்தில் கொண்டுதான் எனது ஆட்சிக்காலத்தில் நான் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்தேன். ஆனால் அந்தத் தரப்பிலிருந்து எவரும் பேச்சுக்கு வரவில்லை. பாராளுமன்றத்தில் கலந்துரையாடி அரசியல்யாப்பை மாற்றவேண்டியது அவசியம்.
கேள்வி:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் பெருமளவு ஊழல் இடம் பெற்றதாகவும், நிதி புலனாய்வு பிரிவு அதனை விசாரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை நீங்கள் எதிர்க்கின்றீர்களா?
பதில்:- விசாரணைகள் இடம் பெறுவதை நாம் எதிர்க்கவில்லை. பொலிஸார், பொலிஸார் போன்று செயற்படவேண்டும். இதனைவிடுத்து பிரதமர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து மட்டும் விசாரிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட விடயம் என்பதே எனது கருத்தாகும்.
கேள்வி:- றகர் விளையாட்டு வீரர் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணை குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- விசாரணையானது சுயாதீனமானதாக இடம்பெறவேண்டும். சரியான தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படவேண்டும். ஆனால் இந்த விடயத்தை தேர்தல் காலத்தில் அரசியல் நலன்கருதி செய்வதாகவே தெரிகின்றது.
கேள்வி:- தாஜு.தீனின் படுகொலை விடயத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மூவர் தொடர்புபட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேரனாரட்ண கூறியுள்ளாரே?
பதில்:- அரசியல் நலன்கருதி இத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. எமது கையில் இரத்தம் படவில்லை. இந்த விடயம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும். ஆனால் முன்னைய விசாரணையினை பார்க்கும் போது என்ன நடந்திருக்கின்றது என்பது தெரிகின்றது.
கேள்வி:- தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் உங்களிடமிருந்து தூரவிலகியிருப்பதாக கருதகின்றீர்களா?
பதில்:- அவ்வாறு கூற முடியாது. மத வாதத்தைப் பயன்படுத்தி திட்டமிட்ட வகையில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு இவ்வாறான நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. நோர்வேக்கு சென்றவர் யார்? அமெரிக்காவிற்கு சென்றவர் யார்? அதன் மூலம் என்ன நடந்தது என்பவற்றை நாம் அறிந்துள்ளோம். முஸ்லிம் மக்கள் தற்போது உண்மையை உணர்ந்தால் மனம் மாறுவார்கள். முஸ்லிம் மக்கள் தற்போது உண்மையைப் புரிந்துள்ளனர்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த சுசில் பிரேமஜயந்த நாம் யாழ்ப்பாணத்தில் அங்கஜன் ராமநாதனை முதன்மை வேட்பாளராக நியமித்துள்ளோம். கடந்த மாகாணசபைத் தேர்தலில் அவர் எமது கட்சியின் சார்பில் வெற்றிபெற்றிருந்தார். இதேபோல் வன்னியில் எமது முதன்மை வேட்பாளராக ஹுனைஸ் பாரூக் போட்டியிடுகின்றார். கிழக்கில் ஹிஸ்புல்லா, பிள்ளையான், அதாவுல்லா, மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினரும் கொழும்பிலும் எமது பட்டியலில் சிறுபான்மையினரும் இடம் பெற்றுள்ளனர்.
கேள்வி:- உங்களது ஆட்சிக்காலத்தில் அரச ஊடகங்கள், அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டன. தற்போது அரச ஊடகங்கள் எவ்வாறு செயற்படுகின்றன. ?
பதில்: அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்படுகின்றன. தற்போது தனியார் ஊடகங்களையும் பிடித்து வைத்துள்ளனர்.
கேள்வி:- உங்களது அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ஜனகபண்டார தென்னக்கோன் இதனை அழுது அழுது கூறியிருந்தார். இதன் உண்மைத்தன்மை என்ன?
பதில்:- அவ்வாறு இல்லை. இப்போது அவர் மாறி அழுகின்றார்.
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது மைத்திரிபால சிறிசேனவும் இக்கருத்தினை கூறியிருந்தாரே?
பதில்:- அரசியலில் போட்டியிடும் போது இவ்வாறு பலதையும் கூறுவார்கள்.
கேள்வி:- உங்களது சலூன் கதவுகள் திறந்துள்ளதாக அடிக்கடி கூறுவீர்கள் 17 ஆம் திகதிக்குப் பிறகும் உங்களது சலூன் கதவு திறந்திருக்குமா?
பதில்:- சிலவேளை திறந்திருக்கும்
கேள்வி:- தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகிய போதிலும் ஐக்கிய தேசியக்கட்சி அமைத்தால் நீங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பீர்களா?
பதில்:- 18 ஆம் திகதி அப்படி வராது