மகிந்த தொடர்பான தனது தீர்மானத்தில் மாற்றமில்லை : என்கிறார் ஜனாதிபதி
நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார் என வெளியாகியுள்ள ஊடக அறிக்கையும் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிடவுள்ளார் என்றும் தமது கட்சிக் கூட்டத்தில் முடிவுகள் எட்டப்பட்டதாக பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவினால் ஊடகஅறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதனையடுத்தே மேற்கண்ட கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் ஐ.ம.சு.முன்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி போட்டியிடவுள்ளார் என்று வெளியாகிய ஊடக அறிக்கையில் எந்தவித உண்மையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சோபித தேரரிடம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, முன்னாள் அமைச்சர் ஒருவரும் தனது முகநூலில் குறித்த விடயம் தொடர்பில் பதிவு செய்துள்ளதுடன் உண்மை விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது கருத்தில் மாற்றமில்லை என்றும் மகிந்தவிற்கு இடமில்லை என்ற கருத்தையுமே தான் கொண்டுள்ளதாகவும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.