பாராளுமன்றத் தேர்தல் 2015 அடுத்த கட்டம் என்ன?
ஓடி விளையாடு பாப்பா ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையையும் வையாதே பாப்பா இது பாரதியார் குழந்தைகளின் உற்சாகத்துக்காக பாடிய பாடலின் அழகான வரிகள்.
ஆனால் இந்த வரிகள் தற்போதைய அரசியல் களத்திலிருக்கும் எம்நாட்டு அரசியல் பிரமுகர்களுக்கு சாலப்பொருத்தமானதாக இருக்கின்றதென்றால் அது மறுப்பதற்கில்லை. காலையில் ஓட ஆரம்பிப்பவர்கள் நள்ளிரவைத் தாண்டியும் ஓய்வில்லாது பயணிக்கின்றார்கள். உட்கட்சிகளுக்குள்ளே ஒருவர் மீது மற்றவர் குற்றங்குறைகளைக் கூறிக்கொண்டிருந்தவர்கள் இன்று திடீரென ஒற்றுமையாகி தோளில் கைபோட்டு ஒரே மேடைக்கு வருகின்றனர். தமது எதிரணியினரைத்தவிர யாரையும் திட்டித்தீர்த்து மனதை நோகடிக்கக் கூடாது என்பதை உறுதியாகக் கொண்டு அழகாக பேசுகின்றனர்.
என்ன நடந்தது? ஏன் இந்த மாற்றம்? இவை இயல்பாக எழும் கேள்விகள். சிலர் மனதுக்கும் அரசியலில் இதுவெல்லாம் சாதாரணப்பா என்ற நகைச்சுவை நடிகர் வடிவேலின் குரலும் ஒலித்துச் செல்லும். ஜனவரி எட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் நூறுநாள் கவுண்டவுன் ஆரம்பமானது.
ஒவ்வொரு பொழுதும் புலரும்போதும் சாயும்போதும் பாராளுமன்றம் கலைவதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டே இருந்தன. 20 நிறைவேறியவுடன் கலையும், டிசம்பர் வரை செல்லும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த முழுமையாக பலவீனமடைந்த பின்னர் கலையும், இன்று கலையும் நாளை கலையும் என எதிர்வு கூறல்களுக்கு குறைவேயில்லை. ஆனால் எப்போது கலையும் என்பதை அந்த ஆண்டவனும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மட்டுமே அறிந்திருந்தனர்.
ஈற்றில் கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரகாரம் எனக்கு குறித்துரைக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 10ஆம் பிரிவின் ஏற்பாடுகளை பயன்படுத்தியும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய நான் இத்தகைய பிரகடனத்தின் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தைக் கலைக்கிறேன் என அறிவித்தார்.
அத்தோடு 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியன்று புதிய பாராளுமன்றம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டவர் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியாக நிர்ணயிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் காலப்பகுதியை வேட்பாளர் மனுவை தாக்கல் செய்வதற்கான காலப்பகுதியாக குறித்துரைக்கிறேன். மேற்படி காலப்பகுதிக்குள் பெயர் குறிப்பிடப்பட்ட வேட்பு மனுக்கள் தெரிவத்தாட்சி அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் திகதி 24கட்சிகள் 312 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிட்டு உருவாக்கப்பட்டிருந்த 7ஆவது பாராளுமன்றம் ஐந்துவருடங்களும் இரண்டு மாதங்களும் கடந்த நிலையில் பத்து மாதங்களுக்கு முன்பதாக கலைக்கப்பட்டது. தலைநகரில் முகாமிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் என்ற அடைமொழியுடன் மீண்டும் எங்கிருந்து வந்தார்களோ அந்தந்தப்பகுதிக்களுக்கே தற்போது சென்றிருக்கின்றனர். மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் கனவோடு.
அவ்வாறிருக்கையில், மான்ட்டெஸ்க்யூ "சட்டங்களின் ஆன்மா" என்ற தமது இரண்டவாது நூலின் இரண்டாவது அத்தியாயத்தில், குடியரசு அல்லது குடியாட்சி ஆகியவற்றில் தேர்தல்கள் நடைபெறும்போது, வாக்காளர்கள் தாம் நாட்டின் ஆட்சியாளர்களாக இருப்பதா அல்லது அரசாங்கத்தின் குடிமக்களாக இருப்பதா என்பதை அவர்களே தீர்மானிக்கின்றார்கள்.
வாக்களிப்பதன் மூலம் மக்கள் இறையாண்மை திறனில் இயங்கி தங்களது அரசு அமைவதற்கு தாங்களே "எஜமானர்களாக" மாறி தெரிவு செய்கின்றார்கள் என்கின்றார். அதற்கமைவாக பொதுமக்களும் 8ஆவது பாராளுமன்ற இறைமையை ஏற்படுத்துவதற்காக தமது தெரிவுகளை மேற்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றார்கள். ஆனால் வெறுமனே காற்றில் கரையும் வாக்குறுதிகளுக்காக அல்ல.
அவ்வாறான நிலையில் தற்போது கட்சிகளின் கிளைக்காரியாலயங்கள், தேர்தல் அலுவலகங்கள், புதிய கூட்டுக்களுக்கான இரகசிய சந்திப்புக்களும் பேச்சுக்களும், மறப்போம், மன்னிப்போம் என பிரிவுகளை ஒன்றாக்கும் தொடர் முயற்சிகள், பழையனவற்றை கழிப்பதா புதியனவற்றை புகுத்துவதா என்ற அடிப்படையில் ஆசனப்பங்கீடு குறித்த பேச்சுக்கள், விஞ்ஞாபனத் தயாரிப்புக்கள், நிதி அனுசரணையாளர்களுடனான பேச்சுக்கள், புதிய பிரசார உத்திகள் போன்ற பல செயற்பாடுகள் அரசியல் களத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
பிளவுகளும் பிரதான கட்சிகளும்
யுத்த வெற்றி, இன அடக்குமுறை, மத ஒடுக்குமுறைகள் மூலம் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டு சர்வாதிகாரப் பாதையில் ஆட்சியைக் கொண்டு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ மீது அண்டை நாடு களும் வல்லரசுகளும் அதிருப்தி கொண்ட நிலையில் ஆட்சி மாற்றமொன்று அவசியம் என்பதை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெகுவாக உணரப்பட்டது.
இதனால் நெருக்கடிக்குள் வாழ்ந்த சிறுபான்மைச் சமூகங்கள் ஒன்றிணைந்ததுடன் சர்வதேசத்தின் ராஜதந்திரமும் கைகொடுக்க புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. ஆட்சியில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அமர்த்தப்பட்டதோடு பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக காணப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அந்தஸ்துக்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து தேசிய அரசாங்கம் உருப்பெற்று சர்ச்சைகளுக்கு மத்தியில் இழுபறிகளுடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அவ்வாறிருக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவரது சகோதரர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து பரஸ்பர கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பாரியார் சிரந்தி ராஜபக் ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ பக் ஷ, விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன் பெர்னா ண்டோ, ரோஹித அபேகுணவர்தன, முன் னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்-ஷ, சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்டவர்கள் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் கைதுகள் சிலவும் மேற்கொள்ளப்பட்டன.
இச் செயற்பாடுகள் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதாக புதிய அரசாங்கத்தால் பிரசாரப்படுத்தப்பட்டபோதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவ ரது நம்பிக்கைக்குரிய சகாக்களுக்கு நெருக்கடியை அளிப்பதாகவும் அரசியல் பழிவாங்கலாகவுமே பார்க்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதன் ஊடாகவே அந் நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கருத்துருவாக்கம் வலுப்பெற்றது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரி சார் அணி மஹிந்த சார் அணி என இரு கூறுகளாக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் பொதுத் தேர்தலும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்-ஷ களமிறங்க வேண்டும் என்ற கருத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் அதிகரித்திருக்கின்ற நிலையில் எண்மர் கொண்ட குழு குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த ராஜபக்-ஷ இடையே தொடர்ச்சியான பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றது.
மறுபக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ களமிறங்குவது தொடர் பில் அமைதி காத்து வருகின்றார். அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தவிற்கு இடம் அளிக்கப்படமாட்டாது என்ற தொனியில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
இவ்வாறான நெருக்கடி நிலைக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திண்டாடிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தாம் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி என வெகுவான நம்பிக்கையுடனும் அடுத்த பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே தொடருவார் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அதுபோன்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மையங்கொண்டிருக்கும் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான முழுமையான நம்பிக்கையை அளிப்பதாக இருக்கின்றது.
யானையில் வலம் வரும் முக்கிய முஸ்லிம் கட்சிகள்
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றிவிட்டார் என இறுதிப் பாராளுமன்ற உரையில் கருத்து வெ ளியிட்டமையும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவுடன் பகிரங்கமாக கருத்துக்களால் முரண்பட்டமையும் அக்கட்சி பொதுத் தேர்தலில் யானையில் ஏறி வலம் வரப்போகின்றது என்பதை புடம்போட்டுக் காட்டியுள்ளது.
மறுபக்கத்தில் கடந்த அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கு ரணில், மைத்திரி, சந்திரிகா ஆகியோர் கூட்டு முயற்சி எடுத்த தருணத்தில் முதன்முதலாக அரசாங்கத்தை விட்டு வெளியேறிய முஸ்லிம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடனே களமிறங்கவுள்ளது.
மலையகக் கட்சிகள்
மலையகத்தில் முடிசூடா மன்னர்கள் என மார்புதட்டிக்கொண்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பில் களமிறங்கவுள்ளது. சில சமயங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மலையகம் சென்று கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவரும் மலையக பாரம்பரிய கட்சியுடன் கைகோர்த்து களமிறங்குவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன.
மறுபுறத்தில் ஆட்சி மாற்றத்தின் பங்காளர்களாக இருந்த திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி என்பன இதுவரையில் தீர்மானத்தை எடுக்காதபோதும் அண்மையில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸுடன் இணைந்து தமிழ் முற்போக்குக் கூட்டணியை உருவாக்கியிருந்தன.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான மனோகணேசனுக்கு ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியில் கொழும்பில் போட்டியிடுவதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ள நிலையில் அக் கூட்டணி பெரும்பாலும் யானையுடன் வலம் வரலாம் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது.
ஜே.வி.பி. மற்றும் இடது சாரிகள்
இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தியாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் ஜே.வி.பி. இம்முறை நாடளாவிய ரீதியில் தனித்துப் போட்டியிடவுள்ளது. அதேபோன்று இக்கட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று உருவாகிய முன்னிலை சோஷலிச கட்சியும் நாடளாவிய ரீதியில் தனித்துப் போட்டியிடவுள்ளது.
அதேநேரம் ஏனைய இடதுசாரி கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிலவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் சிலவும் போட்டியிடுவதற்கு தயாராகிவருகின்றன. ஒருவேளை மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அணியொன்று உருவாகும் பட்சத்தில் இடதுசாரிக் கட்சிகளின் முக்கிய தலைவர்களான வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் அவ்வணியில் இணைவதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன.
இதேவேளை பீல்ட் மார்ஷல் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா இணைந்தா, தனித்தா களம் இறங்குவது குறித்து முடிவெடுக்கப்படாத நிலையில் அவருடனான பிரதான கட்சிகளின் பேரம் பேசல்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் முதற்கட்டத் தேர்தல் கள நிலைமைகள் இவ்வாறிருக்கின்றன.
உற்று நோக்கப்படும் வடக்கு, கிழக்கு
யுத்தம் முடிந்து ஒரு வருடத்தில் தமிழ் மக்கள் தலைமையற்ற இனமாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அவசர அவசரமாக 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் இடம்பெற்றிருந்தது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போனஸ் ஆசனம் உள்ளடங்கலாக 14 ஆசனங்களைப் பெற்று வடகிழக்கில் அமோக வெற்றியீட்டியிருந்தது.
2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆணை வழங்கியிருந்தார்கள். கடந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பகிரங்க ஆதரவை வெளியிட்ட நிலையில் தமிழ் மக்கள் எழுச்சியுடன் வாக்களித்திருந்தார்கள்.
தற்பொழுது யுத்தம் நிறைவுற்று 6 ஆண்டுகள் கடந்த நிலையில் மற்றுமொரு பொதுத் தேர்தல் இடம்பெறுகின்றது. அதற்கு முகங்கொடுக்கும் வடக்கு, கிழக்கில் பிரதான கட்சிகள் உட்பட சிறுபான்மைக் கட்சிகள் அதீத எதிர்பார்ப்புடன் களமிறங்குகின்றன. இவ்வாறான நிலையிலும் இலங்கையின் அண்டை நாடுகள் உட்பட சர்வதேச நாடுகள் வரை வடகிழக்கில் என்ன இடம்பெறப்போகின்றது என்பதை உன்னிப்பாக அவதானித்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக வடமாகாணத்தில் பிரதான பெரும்பான்மைக் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்டவை களமிறங்குகின்றன. இந்நிலையில் தமிழ் மக்களை மையமாக வைத்து பல்வேறு வாக்குறுதிகளை தற்போது மெல்லென ஆரம்பித்திருக்கும் பிரசாரங்களில் முன்மொழியப்பட்டு வருகின்றன. அத்துடன் இக் கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் பணிகளையும் முன்னெடுத்துள்ளதோடு கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன தனித்தே போட்டியிடுவதற்கும் தீர்மானித்துள்ளன.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாகவிருக்கும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் திருகோணமலையில் கூடி தேர்தல் தொடர்பில் நீண்ட ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தது. அவ் ஆய்வில் தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பில் உள்ளீர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆசனப் பங்கீடு குறித்தும் கூடிய அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக" ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்ற தீர்க்கமான முடிவொன்றும் எட்டப்பட்டது.
அதேநேரம் இங்கு தலைமையுரையாற்றும்போதும் அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட தருணத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பாராளுமன்றத் தேர்தலை சர்வதேசமே உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றது. தமிழர்களின் பிரச்சினைகள் உலக அரங்கில் முதன்மைப்படுத்தப்பட்டனவாகக் காணப்படுகின்றன. ஆகவே இத்தேர்தலை நாம் சரியாக அணுகவேண்டும்.
தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் அபிலாஷைகளைப் பெற்று நீடித்து நிலைத்திருக்கக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடைவதற்கான ஜனநாயக பலத்தை தமிழ் மக்கள் அறிவிக்கும் தேர்தலாக இது அமையவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேசிய அரசியல் கட்சிகள், அரசியல் தீர்வு குறித்து தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் நிலைப்பாடுகளை முன்னிலைப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கமைய கூட்டமைப்பு தனது தேர்தல் செயற்பாடுகளை வடகிழக்கில் முன்னெடுக்கவுள்ளது என்பது வெளிப்படை உண்மை.
அரசியல் கட்சியாகக் கூட்டமைப்பைப் பதிவு செய்யவேண்டும், பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பதை வலியுறுத்தும் கருத்துக்கள் தற்போதைக்கு கைவிடப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் தீர்வு தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் என்பதை முதன்மைப்படுத்தியதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எது எவ்வாறாயினும் வடகிழக்கைப் பொறுத்தமட்டில் இம்முறை எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் விடுதலைப் போராட்டம், முள்ளிவாய்க்கால் பேரவலம், மீள்குடியேற்றம், இராணுவ வெளியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு ஆகியவற்றை மையப்படுத்தியதாகவே தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அமையவுள்ளன என்பது நிதர்சனம்.
முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான ஆறு வருட காலப்பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வாதார வசதிகளின்றியும் கட்டமைக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்களால் மீள்குடியேற்றப்படாத நிலையிலும் திட்டமிட்டு காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்குள்ளும் சிக்கித் தவித்து வருகின்றனர். தவிர புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் சுதந்திர நடமாட்டம் மறுக்கப்பட்டு அச்சூழலில் அல்லல்படுகின்ற நிலை தொடர்ந்த வண்ணமிருக்கின்றது.
மறுபக்கத்தில் காணாமல் போனோரின் கதறல்களும் கண்ணீரும் தற்போது வரை ஓயாதவண்ணமிருக்கின்றது. நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு நல்லாட்சியில் கூட நல்லெண்ண சமிக்ஞை காட்டப்படாத நிலையே காணப்படுகின்றது. விதவைப் பெண்களின் நிலைமை அவர்கள் தலைமை தாங்கும் குடும்பத்தின் அவலங்கள் தீர்க்கப்படாது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பேச்சுக்களை மேற்கொண்டபோதும் நிலங்கள் விடுவிப்பு, இராணுவ வெளி யேற்றம், முகாம்கள் அகற்றப்படுதல் என்பன தொடர்பில் கடந்த அரசாங்கமும் புதிய அரசாங்கமும் மோதகமும் கொழுக் கட்டையும் போன்றே வடிவத்தால் மட் டுமே வேறுபட்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையிலேயே இந்த தேர்தலில் வடக்குக் கிழக்குத் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை எடுக்கவிருக்கின்ற னர்.
வெறுமனே பழைய மொந்தையில் புதிய கள் என்பதற்கேற்ப தேர்தல் காலத்தில் வரிகளால் மாற்றப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களை மக்கள் தொடர்ந்தும் ஏற்றுக் கொள்வார்களா என்பதே இங்கு மேலெழும் வினாவாகவுள்ளது.
ஆட்சி மாற்றத்தில் ஒன்றுபட்ட சிறுபான்மை சமூகம் இன்று பொதுத் தேர்தலில் அரசியல் சுயலாபங்களுக்காகப் பிளவுபடுத்தப்படும் அபாயத்திலுள்ளது. மலையகத்தில் நிரந்தர காணிகளில் வீடுகள், சம்பள அதிகரிப்பு என்பனவே முன்னிலைப்படுத்தப்பட்ட தேர்தல் பிரசாரங்களாக அமையவுள்ளன. முஸ்லிம் சமூகத் தைப் பொறுத்தவரையில் நாகபாம்பில் களமிறங்கும் பொதுபலசேனாவின் இனவாத செயற்பாடும் கரையோர மாவ-ட்ட கோரிக்கையும் மீள்குடியேற்ற தடங்கல் களும் பிரதான தேர்தல் பிரசார கோஷங் களாக ஒலிக்கவுள்ளன.
தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை இலக்கு வைத்து கட்டமைக்கப்படும் உத்திகளுக்கு ஒருபோதும் வடகிழக்கு மக்கள் இடமளித்ததில்லை என்பதே கடந்த கால வரலாற்று உண்மையாக இருக்கின்றது. உரிமைகளைப் பெறுவதற் காக இறைமையை ஏற்படுத்தத் தயாராக இருக்கும் தமிழ் மக்களுக்கு வழங் கப்படவுள்ள அடுத்த கட்ட உறுதி மொழிகள் என்ன என்பது தமிழ் அரசியல் பிரமுகர்கள் முன்னால் தற்போதுள்ள வினாவாகும். கடந்த கால அனுபவங்கள் தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மைச் சமூகத் திற்கு அளித்த படிப்பினையால் எட்டாவது பாராளுமன்றத்திற்கு கண்ணை மூடிக்-கொண்டு தமது இறைமையை ஒருபோதும் வழங்கமாட்டார்கள்.
இறைமையுள்ள இனம் தனது நாட்டின் மீது கொண்டிருக்கும் கரிசனையே தேசியவாதமாகின்றது. ஆகவே தவறான இறைமை கட்டமைக்கப்படும் பட்சத்தில் இனங்களின் தேசிய உரிமைகள் இழக்கப் பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாக உருப்பெறுவதற்கு சிறுபான்மைச் சமூகத்தினர் ஒருபோதும் தயாராக இல்லை என்பது திண்ணம்!