யுத்தம் முடிந்தாலும் முரண்பாடுகள் தொடர்கின்றன - அமெரிக்காவில் விக்னேஸ்வரன்
இலங்கையின் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப் பட்டமை முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளதை குறிக்காது என வட மாகாண முதல மைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் செழிப்புடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்க அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் உதவி புரிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் வட மாகாணத்திற்கான வளங்களை குறைத்துள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு என்பது ஒரு நகைப்புக்குரியதாகவும் கேலிக்குரிய விடயமாகவும் உள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர் வடக்கு கிழக்கில் தேர்வுசெய்யப்பட்ட அதிகாரிகளின் வார்த்தைகள் கருத்தில் எடுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஏனைய மாகாணங்களை விட போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு மேலதிக உதவிகளும் நிதியும் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியதுடன் தமக்கான மூல வளங்களை மத்திய அரசாங்கம் குறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்துவதற்கு வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தேவைகளை அடிப்படையாக கொண்ட செயற்றிட்டங்களில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து வட மாகாணம் செயற்படுவதற்கும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.