யாருக்கு வாக்களிக்க வேண்டும்? சிவில் சமூகம் அறிக்கை
யாருக்குவாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 100 இற்குமேற்பட்ட தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுத்துள்ள பிரகடனத்திலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.
அறிமுகம்
மூலப் பிரதியை பார்வையிட கிளிக் செய்யுங்கள்
பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயுதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் - பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும் - தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமையானதல்ல.
தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் ஒரு சில அரசியல்வாதிகளின் பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறுவதற்கான சுயநல, ஆசன அரசியலாக மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
அவ்வாறெனின் இத்தேர்தல்களில் நாம் ஏன் பங்குபற்ற வேண்டும்?
தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை எமது மக்களின் சனநாயக ஆணையாக வெளிக் கொணர்வதற்கும் அந்நிலைப்பாட்டிலிருந்து தமிழர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பாராளுமன்ற தேர்தல்களில் தமிழர்கள் பங்குபற்ற வேண்டிய தேவை இன்று உண்டு.
ஆகவே இங்கு அதிமுக்கியமானது தமிழர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதல்ல எத்தகைய கொள்கைக்கு நாம் ஆதரவளிக்கின்றோம் என்பதே. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள சூழலில் சனநாயக வழியில் ஏற்படும் மக்கள் திரட்சியும் அணிதிரள்வுமே போராட்ட வழிமுறைகளாக தமிழ் மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள். இத்தகைய பரந்து பட்ட வெகுசனப் போராட்டமானது மக்களாலேயே வழிநடாத்தப்பட வேண்டியது. அப்போராட்டத்தில் எம்மால் சனநாயக ரீதியாக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும்.
அந்தப் பிரதிநிதிகள் யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமானதோர் தேர்தலாகவே எதிர்வரும் ஆகஸ்ட் 17 தேர்தல் இருக்கப் போகின்றது. 2010இல் இடம்பெற்ற தேர்தல் யுத்தம் படுமோசமாக முடிவுறுத்தப்பட்ட உடனடிப் பின்னணியில் இடம்பெற்றவோர் தேர்தல். யுத்தத்திற்குப் பின்னரான தமிழரசியலின் போக்கைத் தீர்க்கமாக நிர்ணயிக்கப் போகும் தேர்தலாக 2015 தேர்தல் அமையும்.
தெற்கில் சனவரி 08, 2015 அன்று செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்ற “மாற்றம்” ஆறே மாதத்தில் இருந்த இடம் தெரியாமல் செய்யப்பட்டுள்ளது. ‘நல்லாட்சி’, ‘சட்டத்தின் ஆட்சி’ ‘மீளிணக்கம்’ என்பன தமிழர்களின் தனித்துவமான பிரச்சனைகளைக் கையாள்வதற்கு போதுமானவையல்ல என்பதை இந்த ஆறு மாதங்கள் மீள வலியுறுத்தியுள்ளன.
இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் அடிப்படை மாற்றங்கள் எதையும் செய்யத் தயாரில்லை என்பதே கசப்பான உண்மை. சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் அதனது உண்மை சொரூபத்திலிருந்து இம்மியளவு தானும் அசையவில்லை. கடந்த 6 மாதங்களில் செய்யப்பட்ட மிகச்சிலவான தமிழர் நலன் சார் செயற்பாடுகளுள் எவையுமே கொள்கை மாற்றத்தால் இடம்பெறவில்லை.
சர்வதேச சமூகத்திடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காக் வேண்டா வெறுப்பாகவும் கண்துடைப்பாகவும் சில விடயங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சிங்கள பௌத்த வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அடிக்கடி இரண்டு பெருந் தேசியவாதக் கட்சிகளும் ஒற்றையாட்சி முறைமை மீதான தமது பற்றுறுதியை வெளிப்படுத்த் தவறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
சனவரி 8க்குப் பின் மேற்குலகம் மற்றும் இந்தியா தமது நலன்களோடு ஒத்துப் போகும் அரசாங்கமொன்றை காப்பாற்றுவதிலேயே மும்மரமாக இருக்கின்றன என்பதே கசப்பான உண்மை. தார்மீக, அறம் சார் காரணங்களுக்காக எமது விடயத்தில் சர்வதேசம் காரியமாற்றும் என எதிர்பார்ப்பது எமது இதுவரை காலப் பட்டறிவக்கு முரணானது. இதை எதிர்கொள்ள நாம் எமது நலன் சார் அரசியலிலிருந்து பூகோள அரசியலை அணுகும் தமிழ்த் தரப்பை தெரிந்தெடுக்க வேண்டும்.
ஆகவே தான் அதிசிரத்தையுடன் ஆழமான பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன் நாம் இத்தேர்தலில் எமது தெரிவுகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளுக்கோ அல்லது அவற்றுக்கு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கும் எந்த ஒரு கட்சிக்கோ தமிழ் மக்கள் ஆதரவளிக்க முடியாது.
அப்படி ஆதரவளிப்பது எமது இனத்தின் ஒட்டுமொத்த அரசியற் தற்கொலைக்குச் சமானமாகும். அப்படியாயின் நாங்கள், அதாவது தமிழ் மக்கள் எந்தக்கட்சிக்கு, அவற்றில் யாருக்கு ஆதரவளிப்பது? எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்த துண்டுப் பிரசுரத்தில் அடங்கியுள்ள விடயங்களை வழி காட்டியாக எமது மக்கள் பயன்படுத்த வேண்டுமென நாம் வேண்டி நிற்கிறோம்.
எந்தக் கட்சி இவ்விடம் சொல்லப்பட்டுள்ள நிலைப்படுகளை நேர்மையாக ஏற்றுக் கொள்கிறதோ அக்கட்சிக்கு வாக்களியுங்கள் என்று தயவாக வேண்டுகிறோம்.
நீடித்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வு
1. தமிழர்களின் சுயத்தை இழக்காத அரசியலை முன்னெடுப்பவர்களுக்கே எமது வாக்கு என்ற தெளிவுடன் வாக்களிக்க வேண்டும். தமிழ்த் தேசிய அரசியல் என்பதே சுயநிர்ணய உரிமைக்கான அரசியல்தான் என்ற வரையறையை ஏற்றுக் கொள்பவர்களே எமது பிரதிநிதிகளாக இருக்க முடியும்.
2. ஒரு நாட்டுக்குள் தீர்வு என்பதை நாம்; நிராகரிக்காத அதே வேளை எமது தனித்துவத்தை மறுக்கும் உண்மையில் சிங்கள பௌத்த அடையாளமாக இருக்கும் ‘சிறிலங்கன்’ என்ற அரசியல் அடையாளத்தை அதன் தற்போதைய வடிவத்தில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
3. இலங்கை உண்மையான பல்தேசிய அரசாக பரிணமிக்கும் வரை ‘சிறிலங்கன்’ எனும் அடையாளம் சிங்கள பௌத்த அடையாளமே என்பதே எமது கருத்து. ஆகவே நேரடியாகவோ மறைமுகமாகவோ ‘சிறிலங்கன்’ தேசியம் பேசும் கட்சிகளை, அவர்களது பிரதிநிதிகளாகச் செயற்படும் கட்சிகளை, அவர்களோடு நடைமுறையில் அரசியல் செய்யும் கட்சிகளை நாம் ஒரு போதும் எமது பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது.
4. தேசம், (பிரிக்கப்படாத வடக்கு-கிழக்கு) தாயகம், சுயநிர்ணயம் என்பன வெற்றுக் கோசங்கள் அல்ல. அவை தீர்வுக்கான அடிப்படைகள். இவற்றை ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு அரசியலமைப்புத் தீர்வும் - அது சமஷ்டி அரசியலமைப்பாக இருந்தாலும் - அது நீடித்து நிலைக்காது.
உலகெங்கும் உள்ள அரசற்ற தேசங்கள் அனைத்தும் கடைப்பிடிக்கும் அரசியல் தர்மம் இதுவே. எமது கோரிக்கைகளின் நியாயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசாது - சிங்கள மக்களிடமும் சர்வதேசத்திடமும் எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஒளித்து வைப்பதால் எமக்கான தீர்வு வந்துவிடாது.
மாறாக தமிழ் மக்களது அரசியல் தமிழ்த் தேசியம் சார்ந்த சுயநிர்ணய அரசியல்தான் என்ற யதார்த்த்தை கூறக் கூடியவர்களையே நாம் எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும்.
4. 13ஆவது திருத்தம் எவ்விதத்திலும் - ஆரம்பப் புள்ளியாகவேனும் - எமது தீர்வல்ல. முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை, இந்நாளின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் அனுபவம் இதுவே.
சிலர் கூறுவது போல தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண அரசாங்கத்தின் இயலாமையினாலோ அல்லது கிழக்கில் தமிழர் ஆட்சி அமைக்க முடியாமையினாலேயோ தான் மாகாண சபை முறை பலனளிக்கவில்லை எனக் கூறுவது தவறு.
13ஆம் திருத்தத்தின் உள்ளடக்கத்தின் போதாமையே – அது ஒற்றையாட்சிக்குட்பட்டிருத்தலே - அதன் தோல்விக்கான பிரதான காரணம். நாம் 13ம் திருத்தத்தை எமக்கான தீர்வல்ல என நிராகரிப்பதற்கான காரணமும் இதுவே.
5. பேச்சுவார்த்தைகளுக்கு நடுநிலையான சர்வதேச மத்தியஸ்தம் வேண்டும். அதன் வழி அடையப்பெறும் எந்தத் தீர்வுக்கும் சர்வதேச அங்கீகாரம் தேவை. தெற்கின் அரசாங்கத்தோடு தனித்து பேச்சுவார்த்தைகள் நடாத்துவதில் பயனில்லை.
6. தெற்கில் அமைய விருக்கும் அரசாங்கத்தில் - அது எதுவாக இருந்தாலும் - அமைச்சுப் பதவிகளை எடுத்தல் அல்லது வேறு எந்த விதத்திலும் பங்காளியாதல் அந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக எம்மையாக்கி விடும். அப்படி நேர்ந்தால் அமையவிருக்கும் அரசாங்கத்தோடு தமிழர்கள் தனித்துவமான தரப்பாக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்கு இடையூறாக அமைந்துவிடும்.
7. அதே நேரம் ஆகக் குறைந்த அரசியற் தீர்வாக எத் தீர்வை தாம் ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் கட்சிகள் மக்களிடம் பகிரங்கமாக முன் வைக்க வேண்டும்.
8. அரசியல் தீர்வு தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் பிரயோசனம் இல்லை. அரசியல் தீர்வைக் கண்டடையும் செயன்முறையில் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மட்டும் பங்குபற்றுவது போதாது. மக்கள் முன் தமிழர் தரப்பின் அரசியல் தீர்வு யோசனைகளை பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். அரசியல் தீர்வுக்கான தமிழர் தரப்பு யோசனைகளை மக்;கள் பங்குபற்றுதலுடன் உருவாக்குவதற்கான உத்தேசம் தொடர்பில் கட்சிகள் பகிரங்கமாக சொல்ல வேண்டும்.
பொறுப்புக் கூறல்
1. சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கு நீதியைப் பெற்றுத் தரும். செப்டெம்பரில் ஐ. நா வெளியிடும் அறிக்கையைத் தொடர்ந்து ஐ. நாவின் செயன்முறைக்குட்பட்ட நீதிமன்ற செயன்முறை ஒன்று உருவாக்கப் படுவதற்கான வேலைத்திட்டத்தை நாம் வகுத்து செயற்பட வேண்டும். உள்ளகப் பொறிமுறை மூலம் நீதியான விசாரணை ஒரு போதும் சாத்தியமில்லை. உள்ளகப் பொறிமுறை மூலமான விசாரணையை எந்த வடிவத்தில் தானும் கோரும் கட்சியை நாம் தெரிந்தெடுக்கக் கூடாது.
2. அதே நேரம் தாயகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் இனவழிப்பின் மறைக்கபட்ட உண்மைகளை வெளிக் கொண்டுவரும் வகையில் 66 வருடங்களுக்கும் மேலாக இழைக்கப்பட்ட குற்றங்களை ஆவணப்படுத்தல், சாட்சியங்களைத் திரட்டல், ஒருங்கிணைத்தல், பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன ஆரம்ப முயற்சிகளை முன்னெடுக்க இக்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதுவும் நாம் எமது வாக்குகளை வழங்குவது பற்றிய தீர்மானத்தை எடுக்க முன் அறியப்பட வேண்டியவையே.
3. தமிழ் மக்களின் நினைவு கூரலுக்கான உரிமையை பலப்படுத்தும் வகையில் நினைவு கூரலுக்கான உரிமைகளைப் பெறுவதற்கான செயற்திட்டங்கள் அவசியம்.
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பல்
1. இராணுவமயமாக்கம், காணாமல் போனோர் பிரச்சனை, சிறையிலுள்ள அரசியற் கைதிகளின் நிலை தொடர்பான பிரச்சனை, காணி அபகரிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறை, ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்த போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பாரதூரமாக அதிகரித்து வரும் மதுபான, போதைவஸ்து பாவனை, இடம்பெயர்ந்தோர் பிரச்சனை, மீனவர்களின் உரிமைப் பிரச்சனைகள், வாழ்வாதரப் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு தீர்வு காணும் வகையில் தேவையான முறையான திட்டத்தை முன் வைக்க வேண்டும். அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் பற்றியும் கட்சிகள் மக்களுக்கு சொல்ல வேண்டும்.
2. இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண சுய உதவி அமைப்புக்கள், நிறுவனங்கள் என்பவற்றை பாரியளவில் உருவாக்க வேண்டும். சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்புக்களைப் பலப்படுத்த கிராமிய மட்டத்திலான கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தேவையான நிதி வளத்தினை உள்ளுர் மற்றும் புலம்பெயர் நிதி மூலங்களின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும். முறையான திட்டமிடலுக்கு நிபுணர்களின் ஆலோசனையும் மக்களுடனான கலந்தாய்வும் முக்கியமானது.
அரச இயந்திரத்திற்கு உட்பட்டு இவற்றை செய்ய முடியாவிட்டால் அதற்கு வெளியால் கட்டமைப்புக்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்ளளலாம் என்பதனைப் பற்றிய திட்டமிடல் தேவை. இவற்றைப்பற்றிய முழுமையான முன்வைப்புகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைப்பது சாத்தியம் இல்லாவிட்டலும் அடிப்படை அணுகுமுறை தொடர்பான தெளிவுபடுத்தல் தேவை. வெறுமனே அமைய இருக்கும் அரசாங்கத்துடன் பேசுவோம், சர்வதேச அழுத்தத்தை பிரயோகிப்போம் போன்ற கோசங்கள் போதுமானவை அல்ல.
தமிழ்த் தேசிய அவையை அமைத்தல்
தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தனியே தேர்தல் அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் கைகளில் தேங்கி நிற்பதுவும் அவர்கள் தாமே மக்களின் பிரதிநிதிகள் அதனால் தாமே முடிவுகளை எடுப்போம் மக்களும் மக்கள் அமைப்புகளும் தம்மைக் கேள்வி கேட்பது கூடாது என்று கூறுவதும் இனியும் தொடரக் கூடாது.
தேர்தலில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகளும் பொறுப்புக் கூறக்கூடியதான ஒரு மக்கள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டிய தேவை தமிழ் சிவில் சமூக அமையத்தால் சில வருடங்களுக்கு முன் உணரப்பட்டது. அதற்கான முன் முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டன. தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பல், பொறுப்புக் கூறல் விவகாரம் ஆகியவற்றை முறையாக ஒருங்கிணைக்க தமிழ்த் தேசிய அவை என்ற அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற முன்வைப்பை தமிழ் சிவில் சமூக அமையம் 2013 இல் வெளியிட்டது.
அரசியற் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள் ஆகிய சகலதரப்பையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சி அது. ஆனால் இந்த முயற்சி போதிய ஆதரவின்றி தொடர முடியாமற்போனது.
தமிழ்ப் பொதுமக்களைப் பொறுப்பான வழியில் ஒன்று திரட்டும், இன்று உலகளவில் சனநாயகத்தின் அடுத்த கட்டப் பரிமாணமாக உருவாகி வரும் பங்கேற்பு சனநாயகப் பண்பை எம்மிடையேயும் உருவாக்கும் நோக்கிலானது எமது இந்த முன்வைப்பு. இது எமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்தின் முன் மேலும் சனநாயகப் பண்புடனும் பலத்துடனும் முன்வைப்பதற்கான ஒரு முயற்சியாகும். இம் முன்வைப்பு தொடர்பிலும் கட்சிகள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக முன்வைக்க வேண்டும்.
நிறைவாக
எமது மக்கள் கூட்டுப் பிரக்ஞையுடன் செயலாற்ற வேண்டிய காலப்பகுதி இது. எமது பாட்டனார்கள், முப்பாட்டனார்கள் ஆதரவளித்த கட்சி, உற்றார், உறவினர், நண்பர்கள் அங்கம் வகிக்கும் கட்சி என்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் கடந்து ஆகஸ்ட் 17 அன்று எமது சமூக, தேசியக் கடமையை மனதிலிருத்தி பொறுப்புடன் வாக்களிப்போம்.