மஹிந்தவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால இடமளித்தால் நல்லாட்சி கேலிக்கூத்தாகும் - சுரேஷ்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவது
தற்போது வரை நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது. ஒருவேளை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் நல்லாட்சி கேலிக்கூத்தாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.
அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலின்பின்னர் எந்த ஆட்சி அமைந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக பங்காளர்களாக இணைந்து கொள்ளமாட்டாது எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அவருடைய குடும்பத்தின் சகல அங்கத்தவர்களும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை கொண்டிருக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி தன்னை ஊழலற்றவர் என நிரூபிக்காத நிலையிலேயே மீண்டும் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.
இவருக்கு தற்போது வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஆசனம் வழங்கப்படுகின்றமை குறித்து நிரந்தர முடிவொன்று இல்லாத நிலையே உள்ளது. தற்போது ஆசனம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் இறுதி நேரத்தில் அது ரத்தாகுவதற்கான சாத்தியங்களே அதிகமாகவுள்ளன.
அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆசனம் வழங்கப்போவதில்லையெனத் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றார். இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக போட்டியிடுவதற்கு ஆசன ஒதுக்கீடு வழங்கப்படுமாயின் நல்லாட்சி என்பது கேலிக்கூத்தாகிவிடும்.
அத்துடன் பெரும்பான்மை வாக்குகளை அளித்து ஆட்சி பீடத்தில் அமர்த்திய தமிழ் முஸ்லிம் மக்களை ஏமாற்றும் செயலாகவும் மாறிவிடும். இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்குமா இல்லையா என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.
ஆகவே, அவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ விற்கு ஆசன ஒதுக்கீடு வழங்கப்பட்டால் தொங்கு பாராளுமன்றம் ஒன்றே அமைவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. தேர்தலின் பின்னர் மைத்திரி – மஹிந்த கூட்டணியா இல்லை தற்போதைய நிலைபோன்று மைத்திரி – ரணில் கூட்டணியா இல்லையேல் சிறுபான்மைச் சமூகங்களுடன் இணைந்தக் கூட்டணியா அமையப் போகின்றது என்பது கேள்விக் குரிய விடயமாகும்.
எந்த ஆட்சி அமைந்தாலும் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் பங் காளர்களாக இணைந்து கொள்ளமாட்டாது என்பது உறுதியான விடயம் என்றார்.