சூடுபிடிக்கும் நாடாளுமன்றக் களம்
ஜனாதிபதித் தேர்தலை விட இன்று நாடாளுமன்றத்
தேர்தல்தான் தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ளது. 20 ஆவது திருத்தம், யுத்தக்குற்ற விசாரணைக்கான ஆணைக்குழு எனப் பரபரப்பாக இலங்கை அரசினால் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டவண்ணமிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் குறிப்பிட்டது போன்றே எவரும் எதிர்பாராத வகையில் நாடாளுமன்றத்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு கலைத்திருந்தார்.
இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை சர்வதேச நாடுகள் வரவேற்றிருந்தாலும் கூட இங்கு தற்போது உள்ள சூழ்நிலை என்பது மைத்திரியோ, ரணிலோ குறிப்பாக எவரும் அறுதிப்பெரும்பான்மை பெறக் கூடிய சூழல் இல்லை என்பதுடன் நாடாளுமன்றத்தில் தனித்து எந்தவொரு கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றவும் முடியாத சூழல் நிலவுகின்றது.
100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்து கூட்டணி மூலம் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார். என்றாலும், 100 நாள் வேலைத்திட்டத்தைப் பூரணமாக நிறைவேற்றி முடிப்பதற்கான நாடாளுமன்ற பலம் என்பது மைத்திரியின் கையிலும் இல்லை, கூட்டாட்சியை அமைத்த ஏனைய கட்சிகளுக்கும் இருந்திருக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குப் பலத்தால் அரசியல் அரங்கைவிட்டு வீட்டுக்குச் சென்ற மஹிந்த ராஜபக்வின் அரசியல் பலமே இன்னமும் நாடாளுமன்றத்தை ஆட்டிப்படைக்கின்றது. இந்நிலையில், மஹிந்த ராஜபக்வை ஸ்ரீ லங்கா சுதந்திகரக் கட்சியுடன் இணைத்து செயற்படுவதற்கான செயற்றிட்டங்களைச் செய்யும்படி மஹிந்தவின் சகாக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்குத் தொடர்ந்தும் பணிப்புரை விடுத்து வந்தனர்.
என்றாலும், அதற்கு மைத்திரி தரப்பினர் தலைசாய்த்திருக்கவில்லை என்பதுடன், நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்விற்கு அனுமதியும் வழங்கப் போவதில்லையயனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
நடைமுறையைப் பொறுத்தமட்டில் மஹிந்த ராஜபக்வை முன்னிறுத்திய மூன்றாம் கூட்டணி உருவாகுவது உறுதியாகிவிட்டது. அதற்கான முடிவும் இன்று முன்னாள் ஜனாதிபதியால் விடுக்கப்படவுள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலைப் பொறுத்தமட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இரண்டாகும் என்பதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்குகள் துண்டாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையைப் பொறுத்தமட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் சற்று தலைதூக்கியுள்ளதாக அரசியல் ஆரூடர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனவே, தென்னிலங்கையைப் பொறுத்தமட்டில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் ஓங்கியுள்ளது என்பதுதான் உண்மை. அத்துடன், ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே கூட்டணி வைக்க எண்ணியுள்ளமையைத் தெளிவாக விளங்கக் கூடியதாக உள்ளது.
இந்நிலையில், வடக்கு, கிழக்கைப் பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை ஒரு பாரிய சவால் என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை சரிக்க பெரும்பாலன கட்சிகள் போட்டியிட்டிருக்கவில்லை. இம்முறை தெற்கில் உள்ள பல பெரிய கட்சிகளும் வடக்கில் போட்டியிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அத்துடன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் வடக்கில் போட்டியிடுவதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய சவால் என்றுதான் சொல்லவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியைச் சரிக்கும் நோக்காகக்கொண்டு அண்மைக்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியும் வடக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. அவ்வாறான விடயங்களை ஒரு தருணத்தில் வட மாகாண முதல்வர்கூட சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே, வடக்கின் வாக்குகள் துண்டாடப்படுமா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் மாறுமா என்று எதிர்வரும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
தென்னிலங்கையைப் பொறுத்தமட்டில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனின் பலம் ஓங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தென்னிலங்கையில் மனோகணேசனின் கூட்டணி தமிழ் வாக்குகளைக் கைப்பற்றும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.
மலையகத்தைப் பொறுத்தமட்டில் இம்முறை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு பாரிய சவாலான தேர்தலாக மாறியுள்ளது. மஹிந்த ராஜபக்வின் ஆட்சியில் அங்கம் வகித்தமையினால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முடியாத சூழல் இவர்களுக்குக் காணப்பட்டது.
இம்முறையும் ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பில் தான் போட்டியிடப் போவதாக இ.தொ.கா. அறிவித்துள்ளது.
மலையகத்தைப் பொறுத்தமட்டில் இ.தொ.காவின் அரசியல்பலம் சற்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அண்மைக்காலமாக பரபரப்பாக பேசப்பட்டது. எனவே, புதிதாக உருவாகியுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும்தான் மலையகத்தில் போட்டி நிலவும்.
ஒட்டுமொத்தத்தில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலானது சூடுபிடிக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை.
ஆனால், சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதகமாக அமையப்போகும் ஒரு விடயம்தான் மீண்டும் புலிப் புராணம் பாடி அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் மஹிந்தவின் மீள்வருகை.
பெரும்பான்மை இனத்தை விட இந்தத் தேர்தல் சிறுபான்மை இனத்துக்கே மிக முக்கியமான தேர்தலாகும். நடைமுறையைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்களின் வாக்குப் பலத்தின் மூலமே நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் காணப்படுகின்றது. எனவே, சிறுபான்மைக் கட்சிகள்தான் இம்முறை ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய சூழல் உள்ளது.
-சு.நிஷாந்தன்-