நாட்டின் அமைதிச் சூழ்நிலை தென்பகுதி மக்களின் கைகளில்
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் அறிவித்துள்ள நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தல் கடுமையான பலப் பரீட்சையாக இருக்கும் என்பது நிறுதிட்டமான உண்மை.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்வுக்கு அனுமதி வழங்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படத் தெரிவித்து விட்டார். இந்நிலையில் மகிந்த ராஜபக் மற்றொரு அரசியல் கட்சியில் போட்டியிடுவார் என்று கூறலாம்.இத்தகையதொரு சூழ்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாகப் பிளவுபடக்கூடிய வாய்ப்பு உண்டு என்று கூறுவோரும் உளர்.
எதுவாயினும் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக் தன்னைப் பிரதமர் வேட்பாளராக மையப்படுத்தி போட்டியிடுவார் என்பதும் உண்மை. இத்தகையதொரு சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடக்கூடிய வாய்ப்பு உண்டு.
எதுவாயினும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதன் காரணமாக இலங்கை முழுவதிலும் சமாதானம், அமைதி, இன ஒற்றுமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற செய்தி சமாதானத்தை விரும்பும் மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.துன்பம் மீண்டும் தொடரப் போகிறதா? என்ற ஏக்கத்தின் மத்தியில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதி நிலையை - இன ஒற்றுமைக்கான சூழ்நிலையை சிதையாமல் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பு தென்னிலங்கை மக்களிடமே உண்டு.
இரண்டாம் உலகப்போரில் பிரித்தானியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த வின்சன் சேர்ச்சில் அடுத்த தேர்தலில் தோற்றுப் போனார்.யுத்தப் பிரியரான வின்சன் சேர்ச்சிலை மீண்டும் பிரதமராக்கினால் பிரிட்டன் தொடர்ந்தும் யுத்தம் செய்யும் நாடாகவே இருக்கும்.
எனவே இனி அமைதியை ஏற்படுத்தக்கூடிய ஒருவரை பிரதமராகத் தெரிவு செய்வதே புத்திசாலித்தனம் என்று பிரிட்டிஷ் மக்கள் நினைத்து அதன்படி செயற்பட்டனர். பிரிட்டிஷ் மக்கள் நினைத்தது போல இலங்கையின் தென்பகுதி மக்களும் நினைக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுடன் போர் நடத்தி வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகப் பெரியதொரு மனிதவதையை செய்த எவரும் ஆட்சியிலிருப்பது மீண்டும் இந்த நாட்டில் இனவாதத்தை; இனந்தெரியாத படுகொலைகளை; ஆட்கடத்தல்களை ஏற்படுத்தும் என்ற உண்மையை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்கள் வாக்குகளை தென்பகுதி மக்கள் பயன்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தநாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறார். அவரின் விருப்பம் நிறைவேற வேண்டுமாயின், அந்த விருப்பத்தைக் கொண்டவர்களே பிரதமராக, அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும்.
அப்போது தான் இலக்கை அடைய முடியும்.இதைவிடுத்து யுத்தம் நடத்திய மமதையில் குளுப்பத்தி இருப்பவர்கள் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு பொதுமக்கள் சந்தர்ப்பம் கொடுப்பார்களாயின் இலங்கையில் அமைதி என்ற பேச்சுக்கு இடமேயிராது என்பதால்,எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென்பகுதி மக்கள் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டும்.
-வலம்புரி