Breaking News

வீரத்தலைவனின் ‘இறுதிக்கணங்களை’ படம்போட்டுக் காட்டிய வித்தி!

ஈழத்தமிழர் அரசியலானது தனிநபர்களின் சுயநலன்களுக்காகவும்
ஏனையவர்களின் நலன்களுக்காகவும் களவாடப்படுகின்ற புதிய அரசியற்பரப்பிற்குள் நகர்த்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.
இன்று தாயகம் எங்கும் எதிர்வரும் பொதுத்தேர்தல் பற்றியும் அதற்கான தயார்படுத்தல்கள் எனவும் பச்சோந்திகளின் அரசியல் படமெடுத்தாடுகின்றது.
இந்தவேளையில்தான் முன்னைநாள் ஊடகவிற்பன்னர் என தனக்கு தானே மணிமகுடம் சூட்டிக்கொண்ட வித்தியாதரனின் அடுத்த காய்நகர்த்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.
முன்னைநாள் போராளிகளை ஒருங்கிணைத்து அதன் ஒருங்கிணைப்பாளராக தானே நின்று புதிய அரசியல்பாதையை உருவாக்கப்போவதாக பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த திலீபனின் தியாகப்பயணம் மேற்கொண்ட வீதியில் தியானம் செய்து சபதம் எடுத்ததாக பத்திரிகை அறிக்கை சொல்கின்றது.
விடுதலைப்போராட்டத்தில் தமது வாழ்வை அர்ப்பணித்து போராடிய ஆயிரமாயிரம் போராளிகள் தமது மக்களுக்கான சேவைகளை செய்வதற்கு ஆர்வமாக இருப்பது எதிர்பார்க்கக்கூடியதே. முடிந்தவழியில் இருப்பவைகளை பயன்படுத்தி தமிழர் வாழ்வுக்கு உரமூட்ட முடியுமென்றால் அது உபாயமானதே.
ஆனால் அரசியல் இயக்கமாக மக்களுக்கான சேவையை முழுமையாகச் செய்வது என்றால் அதற்கான வெளிகள் உருவாக்கப்படவேண்டும். அதற்கான காலமோ அல்லது அத்தகைய போராடிய உள்ளங்களுக்கான பாதுகாப்போ அல்லது ஆகக்குறைந்தது தங்கள் உள்ளக் குமுறல்களையாவது வெளிப்படையாக சொல்லக்கூடிய சனநாயகவெளியோ இப்போதைய சூழலில் நிச்சயமாக இல்லை.
சாதாரணமான பொதுமக்களுக்கே இல்லாத அந்த சனநாயகவெளி முன்னைநாள் போராளிகளுக்கு எத்தகைய வாய்ப்புகளை வழங்கப்போகின்றது?
புனிதமான ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பில் இணைந்து தம் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட ஐம்பதினாயிரம் மாவீரர்களின் உணர்வுகளின் கொந்தளிப்பை வெளிப்படுத்தக் கூடிய அரசியல்வெளி தற்போது உண்டா?
அல்லது கால்களை இழந்து கைகளை இழந்து தன் துணையை இழந்து தன் தந்தையை தாயை மாவீரர்களாக இழந்து நிற்கும் எத்தனையோ உறவுகளின் பிரதிநிதியாக ஒருவனால் குரல்கொடுக்க முடியுமா? அதனை இன்றைய “மாற்றங்களின் அரசாங்கம்”; ஆவது அனுமதிக்குமா?
அண்மையில் நான்கு பெண் கிராம சேவையாளர்களும் இரண்டு ஆண் கிராம சேவையாளர்களும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னைநாள் உறுப்பினர்களின் உறவினர்கள் என்ற அடிப்படையில் “கட்டாய புனர்வாழ்வுக்கு” அனுப்பப்பட்டதாக ஒரு செய்தி சொல்கின்றது. மொத்தமாக 11 கிராம சேவையாளர்கள் அவ்வாறு “புனர்வாழ்வுக்கு” இழுத்துச்செல்லப்பட்டதாக இன்னொரு செய்தி கூறுகின்றது.
மாற்றம் என்றும் நல்லாட்சி என்றும் உலகமே கூறினாலும் இன்னமும் அந்த அடிப்படையான உரிமைகூட இல்லாமல்தானே இன்று ஊமையாக எமது மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள்.
அப்படியானால் இந்த திட்டத்தின் பின்னனி என்ன? இத்திட்டத்தின் பிதாமகன் வித்தியாதரனின் இலக்கு என்ன?
இதுபற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தவேண்டுமாயின் 2009 இன் மே மாதத்தின் கனத்த இரவுகளை கடந்தபின்னரான பொழுதுகளில் வித்தியாதரன் செய்த வேலைகள் என்ன என்பதை ஆய்வுக்குட்படுத்துவது அவசியமாகின்றது.
1.இன்று தனது அரசியல் தேவைக்காக விடுதலைப் போராளிகள் மதிக்கப்படவேண்டும் எனக்கூறும் வித்தியாதரன் தமிழர்களின் தேசியசொத்தாக நிலைத்துநிற்கும் தலைவர் பிரபாகரன் பற்றி பொய்யான கட்டுக்கதைகளை பரப்பியதன் உள்ளார்த்தம் என்ன? ஆயிரம் வரையான தற்கொடைப் போராளிகளை களத்திற்கு அனுப்பிவைத்த ஒரு வீரத்தலைவனின்“இறுதிக்கணங்களை” படம்போட்டுக் காட்டிய வித்தியாதரனின் உண்மையான பக்கம் என்ன? தனக்கு பசில் ராஜபக்சவோடு இருக்கின்ற இரகசிய தொடர்பு ஊடாக உறுதிப்படுத்தியதாக அவரால் கசியவிடப்பட்ட அல்லது பட்டைதீட்டப்பட்ட கற்பனைக்கதையின் நோக்கம் என்ன?
2.வடமாகாண முதல்வர் பற்றிய கனவுகள் பொய்த்துப்போக தமிழ்த்தேசிய அரசியலை குழப்பும் விதத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனும் இல்லாமல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியையும் ஆதரிக்காமல் இரண்டையும் குழப்பும்விதத்தில் தனது நகர்வுகளை மேற்கொண்டு தனது தனிப்பட்ட நலன்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடாக முன்னெடுத்த இராசதந்திரம் எதற்காக?
3.உதயன் பத்திரிகை ஆசிரியராக இருந்து விலகி மலரும் என்ற இணையத்தை தொடங்கியபோது பிரதம விருந்தினர்களாக “பத்திரிகையாளர் கொலை புகழ்” டக்ளஸ் தேவானந்தாவும் இந்திய துணைத்தூதர் மகாலிங்கமும் அழைக்கப்பட்டனர். அத்தோடு நிற்காமல் தனது மலரும் இணையத்திற்காக மகிந்தவிடம் ஆசிச்செய்தி பெற்று பிரசுரித்த வித்தியாதரன் கடந்த சனாதிபதி தேர்தலின்போது மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு தேர்தல் விளம்பரங்களை தனது முகப்பு பக்கத்தில் போட்டதன் பின்னனி என்ன?
4.மலரும் இணையதளம் ஊடாக கம்பனைவாரிய ஜெயராஜ் மூலமாக வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியான பதிவுகளை எழுதி அவர் மீது சேறு புசி தமிழ்த்தேசிய அரசியலின் தேவையை தாமதமாகவேனும் புரிந்துகொண்டு செயற்படும் முன்னைநாள் நீதியரசரிற்கு நெருக்கடி கொடுத்ததன் பின்னனி என்ன?
5.தனது எழுத்தாயுதம் என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு; ரணில் விக்கிரமசிங்கவை அழைத்தும் தந்தை செல்வா நினைவுதின உரைக்கு சந்திரிகாவை அழைத்தும் கம்பன் விழாவுக்கு மைத்திரியை அழைத்தும் அழகு பார்த்ததில் பெரும் பங்கு வித்தியாதரனின் பங்கு என்ன?
6. ஊடகப்பயணத்திலிருந்து விலகி அரசியல்பாதைக்குள் புகுந்ததாக கூறும் கடந்த ஆறு ஆண்டுகளில் மண்ணுக்காக போராடிய போராளிகளுக்கு அதன் குடும்பங்களுக்கு அல்லது மரணித்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு அல்லது பாதிக்கப்பட்ட ஆயிரமாயிரம் குடும்பங்களுக்கு இவர் செய்த நற்பணி என்ன?
ஒரு ஊடகவியலாளராக புலனாய்வுத்துறையினரோடும் சிங்கள அரசியல்வாதிகளோடும் உறவுகளை வைத்துக்கொள்வது அவசியம் என்று வாதிடுவோரும் உள்ளனர். ஒரு ஊடகவியலாளன் என்பவன் ஒரு நாட்டின் புலனாய்வு அமைப்பைச்சேர்ந்தவன் போன்று அனைத்து பக்கங்களுடனும் தொடர்புகளை பேணி உண்மையை கொண்டுவரவேண்டும் எனவும் அதற்கு வியாக்கியானம் செய்கின்றனர்.
அந்த வாதம் சரியானதே. ஆனால் அப்படியானவர்கள் ஊடகவியளாளர்களாக இருக்கமுடியுமேயன்றி ஒரு அரசியல் இயக்கத்திற்கு தலைமை தாங்கமுடியாது என்பதையே புரிந்துகொள்ளவேண்டும்.
ஆயிரம் முயலுக்கு ஒரு சிங்கம் தலைமை தாங்கலாம். ஆனால் ஆயிரம் சிங்கங்களுக்கு ஒரு முயல் தலைமை தாங்கமுடியாது என்பது விதியல்ல நெறி.
எது எப்படி என்றாலும் முன்னைநாள் போராளிகளை அரசியல் இயக்கமாக ஒருங்கிணைத்து முன்னகர்த்துவது நல்லதுதானே என்ற இன்nனொரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
வித்தியாதரன் சொல்கின்ற பாதை என்ன?
ஐந்து அல்லது ஆறு போராளிகளை உண்ணாவிரதம் இருக்கவிட்டு இலண்டனுக்கும் கொழும்புக்கும் சம்பந்தன் ஐயாவை நாலு தரம் போய்வரவிட்டாலே தமிழர் பிரச்சனை தீர்ந்துவிடும் என புதிய தீர்வு திட்டத்தை சொல்கின்றார் வித்தியாதரன்.
எதிர்வரும் தேர்தலில் ஒவ்வொரு பிரதேசத்திலும் குறைந்தது இரண்டு முன்னாள் போராளிகளையாவது வேட்பாளர்களாக இணைத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் வித்தியாதரன்.
உயிரை அர்ப்பணித்துப்போராடிய விடுதலைப் புலிப்போராளிகளை இப்படியே சும்மாவிட்டு விடாமல் அரசியல் பாதைக்குள் இழுத்துவருவது சிறிலங்காவின் எதிர்காலத்திற்கு நல்லது என சிறிலங்கா புலனாய்வு துறைக்கு தான் வகுப்பு எடுத்தாக கூறுகின்றார் வித்தியாதரன்.
அப்படியானால் ஒரு பொதுமகனுக்கு இருக்கின்ற அடிப்படை பாதுகாப்பு பொறிமுறையே தமிழர்களுக்கு இல்லாதபோது ஒரு புனர்வாழ்வு பெற்ற முன்னைநாள் போராளிகளுக்கு எத்தகைய பாதுகாப்பு இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள மறுக்கின்றாரா வித்தியாதரன்?
தமிழர் விடுதலைப்போராட்டத்தில் ஒரு உன்னத பங்கை வகித்த போராளிகள் தமது தொடர்ச்சியான செயற்பாட்டினை ஆக்கபுர்வமான வகைகளில் முன்னெடுத்தல் வரவேற்கப்படவேண்டியது.
ஆனால் அதற்கான அரசியல்வெளி இன்னும் உருவாக்கப்படவில்லை. அதனை உருவாக்குவதற்கான அழுத்தங்கள் உரிய வகைகளில் வலுப்படத்தப்படவேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்க தமிழ்ச்சிவில் சமூகம் போன்ற பொது அமைப்புகள் சமூகத்தால் மதிக்கப்படுகின்ற சமயப்பெரியார்கள் ஊடாக சர்வதேச பலத்தின் ஆதரவுடன் அந்தவெளி உருவாக்கப்படவேண்டும்.
உயிரை கொடுத்து அர்ப்பணித்துப்போராடிய இயக்கத்தின் போராளிகள் முதலில் தேர்தலில் குதித்து மக்கள் சேவை செய்வோம் என்பதற்கு மாறாக முதலில் மக்கள் இயக்கமாக தங்களை தகவமைத்துக்கொள்ளவேண்டும். உலக வரலாற்றில் பேசப்பட்ட இயக்கம் மூன்றாந்தர அரசியல்வாதிகளைப்போல சந்தர்ப்பம் கேட்டுச்செல்வதும் சந்தர்ப்பம் தராவிட்டாலும் உங்களுடன் இணைந்து வேலை செய்கின்றோம் என கெஞ்சவேண்டிய நிலைக்கும் செல்வதும் விடுதலைப்போராளிகளுக்கு பொருத்தமானதுதானா என்பதை சிந்திக்கவேண்டும்.
அதனைவிடுத்து அவசரப்பட்டு குழப்பங்களை உருவாக்கும் நோக்கிலும் பிழையான நோக்கத்தின் அடிப்படையிலுமே இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற இயல்பான கேள்விக்கு உரியவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
-  தமிழ்லீடர் -