Breaking News

கம்பகா மாவட்டத்தில் போட்டியிடுவார் மகிந்த

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கம்பகா மாவட்டத்தில் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரத்தினபுரி அல்லது குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்கே, மகிந்த ராஜபக்ச விருப்பம் வெளியிட்டிருந்தார். ஆனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அந்த மாவட்டங்களின் முக்கிய தலைவர்கள் அதற்குச் சாதகமான பதிலை அளிக்கவில்லை.

அதேவேளை, தனது சொந்த மாவட்டமாக அம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளார். அவரது மகன் நாமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதாலேயே, மகிந்த ராஜபக்ச அங்கு போட்டியிட விரும்பவில்லை.

இந்தநிலையில், சுதந்திரக் கட்சியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு, அதற்கு இணக்கம் தெரிவித்தால், கம்பகா மாவட்டத்திலேயே மகிந்த ராஜபக்ச போட்டியிடக் கூடும், என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச கம்பகாவில் களமிறங்குவதை தடுக்கும் நோக்கிலும், அங்கு தனது செல்வாக்கை நிரூபித்து மகிந்தவின் வாக்குகளை உடைக்கும் வகையிலும், சந்திரிகா குமாரதுங்க களமிறங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.