4 முக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்புமனு இல்லை: மேலும் 10 பேருக்கும் சிக்கல்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்புமனுக்களை வழங்காதிருக்க, கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனுச் சபை இணக்கம் தெரிவித்துள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளின் இறுதி வேட்புமனு பட்டியலை வெளியிடுவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு நள்ளிரவு வரை இடம்பெற்றதாக தெரியவந்துள்ளதோடு, இதன்போது வேட்புமனு வழங்குவது தொடர்பிலான நான்கு முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களுக்கு வேட்புமனு வழங்குவதா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த சில்வா, மேவின் சில்வா, சஜின்வாஸ் குணவர்த்தன, சரண குணவர்த்தன ஆகிய நால்வருக்கு வேட்புமனு வழங்காதிருக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மேலும் 10 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேட்புமனு வழங்குவது குறித்து நிச்சயமற்ற நிலையே காணப்படுவதாக தெரிகிறது.
இதேவேளை தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வேட்பு மனுப் பட்டியலை, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு சென்று, இறுதி இணக்கப்பாட்டுக்கு வர வேட்புமனு சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.