Breaking News

மைத்திரியின் கையில் வேட்பாளர் பட்டியல் – மகிந்தவுக்கு ஒப்புதல் அளிப்பாரா?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமா இல்லையா என்ற கேள்வி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நாளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவில் கையெழுத்திடவுள்ளனர்.


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுக்களில் கையெழுத்திடும் நிகழ்வு நாளை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வேட்புமனுக்கள், மாவட்டச் செயலகங்களில் எதிர்வரும் 10ம் நாளுக்கும் 13ஆம் நாளுக்கும் இடையில் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்படும்.

இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுக்கிடையே வேட்பு மனுக்கள் தொடர்பாக நேற்று பல மணிநேரப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை கட்சியின் செயலர் சுசில் பிரேம்ஜெயந்த இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டது குறித்து இதுவரை மௌனம் சாதித்து வந்த ஜனாதிபதி இந்த வேட்புமனுவுக்கு ஒப்புதல் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.