மஹிந்தவின் சிறப்புரிமைகளை உடன் வாபஸ் பெறவேண்டும்! தேர்தல்கள் ஆணையாளரிடம் ஐ.தே.க.கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைச் சலுகைகளை வாபஸ் பெற வேண்டும்
என்று தேர்தல்கள் ஆணையாளரை வலியுறுத் தும் ஐ.தே.க., முடிந்தால் குருணாகலில் மஹிந்த போட்டி யிட்டு வெற்றி பெற்றுக்காட்டட்டும் என்றும் சவால் விடுத்தது.
பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே ஐ.தே.க.வின் பேச்சாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
தனக்கு 58 இலட்சம் மக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட அல்லது தலைமை வேட்பாளராக போட்டியிடவோ பிரதான பிரசாரகராக செயல்படவோ கட்சி அனுமதி வழங்கவில்லை. அவர் பிறந்த அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதை கைவிட்டு மகனின் வெற்றிக்காக குருணாகலில் போட்டியிட முயற்சிக்கின்றார்.
நான் சவால் விடுக்கின்றேன் முடிந்தால் மஹிந்த குருணாகலில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்ட வேண்டும். அன்று ஜே.ஆர். ஜயவர்தன நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்தி ஜனாதிபதி ஒருவர் ஓய்வுபெறும் போது அவருக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், உத்தியோகபூர்வ அலுவலகம், உதவியாளர்கள், விசேட பாதுகாப்பு உட்பட விசேட சிறப்புரிமைச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் வலியுறுத்தினார்.
இது ஜனாதிபதி பதவிக்கு உள்ள கௌரவத்தை பாதுகாப்பதற்கே ஆகும். எனவே இன்று மஹிந்த கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் தற்போது பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
இதனால் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைகளை தேர்தல்கள் ஆணையாளர் மீளப் பெற வேண்டும். மஹிந்த இன்று தேர்தலில் போட்டியிடவுள்ளதால் அவர் முன்னாள் ஜனாதிபதியின் பட்டியலில் இடம்பெற முடியாது.
எனவே மஹிந்தவும் சாதாரண வேட்பாளர் எனக் கணித்து சிறப்புரிமைகளை தேர்தல்கள் ஆணையாளர் மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக அமையும். எதிர்காலத்தில் அனைவரும் இவ்வாறு விசேட பாதுகாப்பு கோருவார்கள். இது ஏனைய வேட்பாளர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
மஹிந்தவை சுற்றி இன்று மோசடிக்கார கும்பலே உள்ளது. அவர்கள் மஹிந்தவை பிரதமராக்கி குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்.எனவே எதிர்வரும் தேர்தலில் யாரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் யாரை அனுப்பக் கூடாது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு வருடத்திற்கு 10,000 கோடி ரூபா செலவழித்த திருடர்களை பாதுகாத்த திருட்டை சட்டபூர்வமாக்கிய மஹிந்த மீண்டும் வெற்றி பெறமாட்டார். ஐ.தே.க. இத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது நிச்சயமாகும். இதனை எவராலும் தடுக்க முடியாது. எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதியுடன் ராஜபக் ஷக்களின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென்றும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.