மனோவுடன் கூட்டமைப்பு அவசர பேச்சு
வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக,
மனோ கணேசனுடன் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியுள்ளது. கொழும்பில் நேற்று மாலை இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு , கம்பகா மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கொடுத்தனுப்பிய கடிதமும் மனோ கணேசனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்கள் பற்றிய விபரங்களை வெளியிட மனோ கணேசன் மறுத்துள்ளார். என்றாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை தொடர்ந்து நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார். வடக்கு கிழக்கிற்கு வெளியே கொழும்பு. கம்பகா மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என்று பரவலான கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இதன் மூலம், ஆசனங்களைப் பெறாதுபோனாலும் கூட, தேசியப் பட்டியல் ஆசனங்களை அதிகரிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
இந்த தேர்தலில் ஐதேகவுடன் இணைந்து போட்டியிட மனோ கணேசனின் கட்சி தீர்மானித்துள்ளது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையிலேயே, நேற்றைய சந்திப்பில் கொழும்பு, கம்பகாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.