Breaking News

கூட்டமைப்புக்கு எதிராக வடக்கில் புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி

வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கொள்கை ரீதியான முரண்பாட்டை வெளிப்படுத்தி வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முனைந்து, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படாத அதிருப்தியாளர்களைக் கொண்டே இந்த புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட விண்ணப்பித்து, அதன் தலைமையால் நிராகரிக்கப்பட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும் இது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்த பின்னர், அடுத்த கட்டம் குறித்து ஜனநாயக போராளிகள் கட்சி இன்னமும் தமது நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

அதேவேளை, தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டதை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட அனுமதி கிடைக்காத நிலையில், யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈபிஆர்எல்எவ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்களில் ஒன்றை வழங்க முன்வந்த போதும்,, அதற்கும் மாவை சேனாதிராசா தடை ஏற்படுத்தி விட்டதாக அனந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும், அவர் தாம் நாடாளுமன்றத் தேர்தலில் வேறு கட்சி சார்பில் போட்டியிடுவாரா என்பது குறித்து அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.