சட்டவிரோதமாக படகுமூலம் இந்தியா சென்ற நபர் கைது
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு அகதியாக சென்றவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபருடன் சென்று தப்பியோடிய மற்றொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு இலங்கையில் இருந்து படகில் சிலர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்து இறங்கியதாக தனுஷ்கோடி பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தனுஷ்கோடி மற்றும் மரைன் பொலிஸார் விடிய விடிய அப்பகுதியில் உள்ள மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். கஸ்டம்ஸ் மற்றும் புலனாய்வு துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர். இதில், தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை செல்லும் வழியில் மணல் திட்டுகளுக்கு இடையே பதுங்கியிருந்த இலங்கை நபர் ஒருவர் நேற்று காலை பொலிஸாரிடம் பிடிபட்டார்.
அவருடன் இருந்த மற்றொரு நபர், தப்பி விட்டதாக கூறப்படுகிறது. பிடிபட்ட நபர், இலங்கை மன்னார் மாவட்டம் உயிலங்குளம் பகுதி கோயில் வீதியைச் சேர்ந்த சிவனாதன் கிறிஸ்டி (25) என தெரிந்தது.
அவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டதாகவும், நேற்று அதிகாலை 4 மணிக்கு அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்திறங்கியதாகவும், படகு கட்டணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படகில் தன்னுடன் வேறு சிலரும் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தப்பியவரை புலனாய்வு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.