Breaking News

புலிகள் மீது குறைகூறுவது வம்பை விலைக்கு வாங்கும் செயல்: கருணாநிதி


விடுதலைப் புலிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த மனுவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் மனுவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புப் பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கேரளா வசம் இருக்கிறது.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இது தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த துணை மனுவில், அணையைத் தகர்க்கத் தீவிரவாதக் குழுக்கள் முயற்சிப்பதாக மத்திய உளவுத் துறை தகவல் அளித்திருப்பதாக தமிழக அரசு கூறியிருந்தது.

இந்த மனுவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இது தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அவசியம் என்றாலும், விடுதலைப் புலிகள் மீது குறைகூறி, அவர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல் என கூறியுள்ளார்.

மேலும் புலிகள் மீது மாசு கற்பிப்பதைப் போலவும் அவர்களின் முதுகிலே குத்தி அவமானப்படுத்துவதைப் போலவும் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருப்பதைக் கண்டிப்பதாக கருணாநிதி கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை சுமுகமாகத் தீர்க்க வேண்டுமென விஜயகாந்த் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இது தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி என்று கூறியுள்ளார். இது போன்ற செயலில் ஈடுபடும் அமைப்பின் பெயரை தமிழக அரசால் வெளியிட முடியுமா என்றும் விஜயகாந்த் கேள்வியெழுப்பியிருக்கிறார்.