சிறுபான்மையின மக்களுக்கு மைத்திரி துரோகம் செய்யக் கூடாது – சுரேஸ்
மகிந்த ராஜபக்சவைப் போட்டியிட அனுமதிப்பதன் மூலம், தன்னை அதிகாரத்துக்கு கொண்டு வந்த சிறுபான்மையின மக்களுக்கு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்யக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழப்பமடைந்துள்ளது. மற்றெல்லோரையும் விட ராஜபக்ச குடும்பத்தின் ஊழலை முாசமாக விமர்சித்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான்.
ராஜபக்சவின் பிடியில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவுமே தன்னை மக்கள் தெரிவு செய்திருப்பதாக அவர் கூறியிருந்தார். இது நாட்டில் நல்லாட்சியை எற்படுத்தும் எதிர்பார்ப்பில் மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவு செய்ததில், தமிழ், முஸ்லிம் மக்கள் முக்கியமான பங்காற்றியுள்ளனர்.
ராஜபக்சவின் ஊழல் ஆட்சியைத் தோற்கடித்த பின்னர், அவருக்கு போட்டியிட நியமனம் வழங்குவது, அவரை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு பிராணவாயு கொடுத்தது போல அமையும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தற்போதைய அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்தது.
ஆனால், தவறான நகர்வுகளால், நல்லாட்சி அமையாது போகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட இடமளிக்கப்பட்டது குறித்து, தமிழ் ஊடகம் ஒன்று எழுப்பியிரந்த கேள்விக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் கருத்து வெளியிட மறுத்திருந்தனர். அது அவர்களின் உட்கட்சிப் பிரச்சினை என்றும் அதுகுறித்து கருத்து வெளியிட முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.