இன்று மகிந்த - மைத்திரிக்கு பதிலடி கொடுப்பார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரை இன்று அனுராதபுரவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை ஐதேக ஏற்கனவே கண்டியில் இருந்து ஆரம்பித்து விட்ட நிலையில், அனுராதபுரவில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரை ஆரம்பிக்கவுள்ளது. இந்த தேர்தல் பரப்புரையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொண்டு வரும் முயற்சியில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் ஈடுபட்ட போதிலும், அது தோல்வியில் முடிந்தது.
அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளியிட்ட கருத்துக்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தான் இன்று பரப்புரைகளை அந்தக் கட்சி ஆரம்பிக்கின்றது.
இன்றைய பரப்புரைக் கூட்டத்துக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் குழுத் தலைவர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார் என்று, நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கு இன்றைய கூட்டத்தில் பதிலளிப்பதாக, மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். இதனால் இன்றைய கூட்டம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.