மைத்திரி மீது நடவடிக்கை எடுக்க பிக்குகள் கோரிக்கை
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்புடைய ஸ்ரீலங்கா பிக்குகளின் அமைப்பின் தலைவர் வட்டினாபஹா சோமானந்த தேரர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை அண்மையில் ஊடகங்களிடம் கூறியதாக தெரிவித்த வட்டினாபஹா சோமானந்த தேரர், தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் தோற்கடிக்கப்படுவாரென மைத்திரி கூறியிருந்ததைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தென்று விமர்சித்தார்.
இதன்மூலம் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிற்கு பெரிய அளவில் பாதிப்புக்கள் ஏற்படுமென்றும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி சிறிசேன இவ்வாறான கருத்துக்களைக்கூற முடியாதென்று தெரிவித்த வட்டினாபஹா சோமானந்த தேரர், இது கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறும் ஒரு செயலென்று குற்றம் சாட்டினார்.
தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சிக்கு மறைமுகமான ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே ஜனாதிபதி சிறிசேன இவ்வாறான கருத்துக்களை கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரிடம் எழுத்து மூலமான வேண்டுகோளை தாம் விடுத்துள்ளதாக வட்டினாபஹா சோமானந்த தேரர் கூறினார்.
பௌவுத்த பிக்குகள், அரசியலில் உட்கட்சி விவகாரத்தில் இவ்வாறான கோரிக்கைகளை விடுப்பது நியாயமானதா என்கிற கேள்விக்கு பதிலளித்த வட்டினாபஹா சோமானந்த தேரர், தமது அமைப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு கிளை அமைப்பாக செயற்பட்டு வருவதாகவும், எனவே அந்த கட்சிக்கு பாதிப்புக்கள் ஏற்படும்போது அதனை தம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்றும், அதன் காரணமாகவே தாம் இந்த முறைப்பாட்டை சமர்ப்பிக்க தீர்மானித்ததாகவும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தேர்தலில் நிறுத்துவதன் முலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறமுடியாதென்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த கருத்து குறித்து ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மகிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதி அல்ல என்றும், அவர் மீது எதிர்க்கட்சிகள் சுமத்தும் ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு இது என்றும் கூறினார்.
மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதை தடுப்பதற்கு பல சர்வதேச சக்திகள் முயற்சி செய்து வருவதாக புகார் கூறிய வடினாபஹா சோமானந்த தேரர், அத்தகைய சதி முயற்சிகளுக்கு சார்பாகவே ஜனாதிபதி சிறிசேனவின் கருத்துக்கள் அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.