பெண்களின் அரசியல் உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும்; கட்சிகளிடம் அரசு கோரிக்கை!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் குறைந்தது 30 சதவீத பெண் வேட்பாளர்களையாவது இணைத்துக் கொள்ளுமாறு, பெண்கள் விவகார அமைச்சு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அரசியல் கட்சிகள் தங்களது தேசியப் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்களை பெண்களுக்கு ஒதிக்கீடு செய்யுமாறு, குறித்த அமைச்சின் கீழ் இயங்கும் பெண்களுக்கான தேசிய குழுவின் தலைவர் சுவர்ணா சுமனசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தின் தேசிய அபிவிருத்திக்கும் சமூகத்திற்கும் பங்களிப்பை நல்கக் கூடிய சிறந்த கல்வி அறிவுடைய பெண்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவளை கடந்த பாராளுமன்றத்துக்கு தெரிவான பெண்களின் சதவீதம் 5.8 ஆக காணப்படுகின்றது.பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 153 நாடுகளின் பட்டியலில் இலங்கை தற்போது 140வது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.