ஜெயலலிதா இன்று பதவியேற்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதுமே சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் நண்பர் தொழிலதிபர் அதானி குழுமத்துடன் சூரிய சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, இப்தார் விருந்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஆனால் திடீரென அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு புதன் ஒரையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று சட்டசபை உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் கோட்டையில் செய்யப்பட்டுள்ளன.
ஜெயலலிதா முதல்வராக சனிக்கிழமையன்று புதன்ஓரையில்தான் பதவியேற்றார். அதேபோல சட்டசபை உறுப்பினராக சனிக்கிழமையன்று பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. பதவிப்பிரமாணம் முடிந்த பின்னர் கொடநாடு எஸ்டேட்டிற்கு முதல்வர் செல்ல இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயலலிதா கொடநாடு செல்வதால் அவரை வரவேற்க கொடநாட்டில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடநாடு எஸ்டேட் செல்லும் ஜெயலலிதா சுமார் 2 வாரம் அங்கு தங்கியிருந்து அரசுப் பணிகளை பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.