யானையை மதம்பிடிக்கச் செய்தால் மஹிந்த அணிக்கு ஆபத்தாகும்! ஐ.தே.க.வின் செயலாளர் கபீர் ஹாஷிம்
அமைதியாக இருக்கும் யானையை மதம் பிடித்த யானையாக மாற்றினால் தாங்கமாட்டீர்கள் என மஹிந்தவுக்கும் அவர் சார்பு அணிக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம், ஜனவரி 8ஆம் திகதி அன்னப்பறவை மூலம் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட புரட்சியின் இரண்டாம் பாகம் 17க்குப் பிறகு யானையில் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார்.
பிட்டக்கோட்டேயிலுள்ள ஐ.தே.க.வின் தலைமையகத்தில் நேற்று வியாழன் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் கபீர் ஹாசீம் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனவரி 8ஆம் திகதி அன்னப்பறவை தனது கடமையை செய்தது. ஊழல் மோசடிக்காரர்கள் திருடர்கள் விரட்டியடிக்கப்பட்டு மைத்திரி தலைமையில் முதலாவது புரட்சி நாட்டில் இடம்பெற்றது.
இன்று யானை சின்னத்தில் இரண்டாவது புரட்சி ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி ஐ.தே.க.வின் இப்புரட்சி வெடிக்கும். யானை அமைதியான மிருகம். ஆனால் அதனை மதம் பிடிக்கவைத்தால் தாங்க முடியாது. எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அணி யானையை மதம் பிடிக்க வைத்தால் தாங்க முடியாமல் போகும்.
இன்று ஊழல் மோசடிக்கார கும்பல் அனைவரும் ஓரணில் இணைந்து மெதமுனையில் புலம்ப ஆரம்பித்துள்ளனர். இந்தப் புலம்பல் கேலிக் கூத்தானதாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.
அவர் ஒருபோதும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கையையும் சிதைத்து விட மாட்டார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து சவால்களுக்கும் முகம்கொடுக்க தயாராகவே உள்ளோம்.
நிச்சயம் ஐ.தே.க. வெற்றி பெறும். மெதமுனையில் கூடிய மோசடிக் கும்பலின் கூட்டத்தின் உண்மையான நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.