இலங்கை தேர்தல் கண்காணிப்பில் 3 வெளிநாட்டுக் குழுக்கள் – அமெரிக்காவுக்கு இடமில்லை
இலங்கையில் வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க மூன்று வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வரவுள்ளன.
இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்த அழைப்புக்கு அமையவே, இந்த வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், கொமன்வெல்த், சார்க் கண்காணிப்புக் குழுக்களே தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் ஆணையம், கொமன்வெல்த் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அதிகாரிகள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் தொகுதி கண்காணிப்பாளர்கள் இன்று இலங்கைக்கு வரவுள்ளனர்.இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவில் இடம்பெறும் 8 தேர்தல் பகுப்பாய்வாளர்கள் மற்றும் 18 நீண்டகால பார்வையாளர்கள் அனைத்து மாகாணங்களிலும் பணியில் ஈடுபடவுள்ளனர். அதேவேளை, 28 குறுங்கால பார்வையாளர்கள் தேர்தலை அண்டிய நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் பணியில் ஈடுபடுவர்.
அதேவேளை, இந்த தேர்தலை கண்காணிக்க அமெரிக்க கண்காணிப்பாளர்களும் வரவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அமெரிக்க கண்காணிப்பாளர்களுக்கு இலங்கையில் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.