சுன்னாகம் நிலத்தடிநீரில் ஒயில்கசிவு! தமது தவறு இல்லை என்கிறார் சம்பிக்க
சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் டீசல் கலந்துள்ளமை எமது தவறு இல்லை என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண பதில் பொது முகாமையாளர் அலுவலக கட்டட தொகுதி அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் கடந்த காலங்களில் மின்சாரத்தை வழங்குவதற்கு எண்ணெயினைப் பயன்படுத்துவதற்கு 160 கோடி ரூபாவைத் தாண்டியது. தனியார் நிறுவனத்தினால் அன்று வழங்கப்பட்ட மின்சாரத்தை நிறுத்த முடியாத நிலை இருந்தது. அதனையடுத்து சுன்னாகம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சார நிலையத்தினால் கடந்த கால செலவீனத்தை ஈடுசெய்யக் கூடியதாக உள்ளது. இந்தநிலையில் சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் டீசல் கலந்துள்ளதாக அண்மையில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தநிலை எங்களால் ஏற்படவில்லை என்பதனை நான் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன். எனினும் தற்போது பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. நிலத்தடி நீரில் டீசல் கலக்கவில்லை என்றும் கிருமிநாசினியே கலந்துள்ளது என்றும் அதனாலேயே மாசடைந்துள்ளது என்றும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010 ஆண்டு நான் சுன்னாகம் பகுதிக்கு வந்தபோது அங்குள்ள விவசாயிகளுடன் பேசினேன். அதன்போது தாங்கள் கிருமிநாசினிகளை பாவிப்பதில்லை என்று தெரிவித்தனர். அந்தநிலையில் இந்த கிருமிநாசினிகளின் பாவனையால் கிட்னி தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எனினும் இன்னமும் உத்தியோக பூர்வ அறிக்கை பரிசோதனை செய்யும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் அறிக்கை கிடைக்கவில்லை. அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மின்சார நிலையத்தின் கழிவு ஒயில் என கண்டறியப்பட்டால் அதற்கான நடவடிக்கையினை எடுப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.