Breaking News

தமிழ்த் தேச விரோதக் குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாம் - டக்ளஸ் சொல்கிறார்

தமிழ்த் தேசவிரோதக் குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், அதுவொரு தேர்தல் கூட்டே தவிர வேறொன்றும் இல்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில் இன்று வியாழக்கிழமை அவர் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: 

ஊடகங்கள் எப்போதும் வெளிப்படையாகவும் உண்மைத்தன்மையுடனும் செய்திகளை வெளியிடும் அதேவேளை, நடுநிலைமையுடன் பக்கம் சாராதும் செயற்பட வேண்டும். நான் முன்னைய காலங்களில் அரச சார்பான நிகழ்வுகளை மூடிய அறைக்குள் நடத்தவில்லை. வெளிப்படைத்தன்மையுடனே நடத்தினேன். அவ்வாறான செயற்பாட்டையே விரும்புகின்றேன். 

ஊடகங்கள் மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம்கொடுக்க வேண்டியது அவசியம் என்பதுடன் கடந்த காலங்களில் பக்கச் சார்பாக நடந்து கொண்டதன் பயனாகவே மக்கள் இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். நாம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதன் ஊடாகவும் நீடித்த ஆட்சியிலும் தான் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது. 

இதற்கு மாறாக ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறி வந்தபோதிலும் இதுவரையில் அவர்களால் எதை சாதிக்க முடிந்தது என்றும் கேள்வி எழுப்பினார். அத்துடன், எமது இணக்க அரசியல் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடியதன் பயனாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமின்றி வட மாகாணத்தில் பல இடங்களை விடுவித்துள்ளோம். 

குறிப்பாக, வலிகாமம் வடக்குப் பகுதியில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலப்பகுதியில் இணக்கம் காணப்பட்டிருந்தவை என்றும் இதை தமிழரசுக் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஏற்றுக் கொண்டிருந்தார் என்றும் டக்ளஸ் கூறினார். தூரநோக்கமும் நடைமுறைச் சாத்தியமானதுமான எதிர்கால இலக்கை நோக்கியதான எமது பயணத்தில் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். 

இதனிடையே ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று மாவை சேனாதிராஜா தெரிவித்தார் எனப் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை இதன்போது சுட்டிக்காட்டினார்.