Breaking News

கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இன்று இறுதி முடிவு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையில் இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

மாவட்ட ரீதியாக வேட்பாளர் பட்டியலில் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கிடையில் ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து, வவுனியாவில், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

முக்கியமாக வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தொடர்பாக இன்னமும் இழுபறி நிலை இருந்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த இரா.சம்பந்தன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் இம்முறை போட்டியிட மாட்டார்கள் என்று தெரியவருகிறது.

இரா.சம்பந்தன் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு செல்ல உத்தேசித்துள்ளார். அப்பாத்துரை விநாயகமூர்த்தி, உடல் நிலை காரணமாக போட்டியில் இருந்து ஒதுங்கத் தீர்மானித்துள்ளார். அதேவேளை, அனந்தி சசிதரன் உள்ளிட்ட சில மாகாணசபை உறுப்பினர்களும், இந்த தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு தலைமைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் அனந்தி சசிதரனுக்கு போட்டியிட தமிழரசுக்கட்சி இடமளிக்க மறுத்து விட்டதாக அவர் பிபிசிக்கு தகவல் வெளியிட்டுள்ளார். அதேவேளை, வேறு கட்சியின் சார்பில் போட்டியிடுவது குறித்து தாம் இதுவரை முடிவு எதையும் எடுக்கவில்லை என்று அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.