Breaking News

நிச்சயமற்ற நிலையில் மகிந்த – அனுராதபுர கூட்டம் திடீரென ஒத்திவைப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேடையேறவிருந்த அனுராதபுர கூட்டம் திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மகிந்த ராஜபக்ச தனது அரசியல் மறுபிரவேசத்தை அறிவித்த பின்னர், அனுராதபுரத்தில் நாளை மறுநாள் நடக்கவிருந்த பாரிய பேரணியில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே அவருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டங்களில் அவர் மேடைஏறாத நிலையில், அனுராதபுரவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அவர் முதன்முதலாக மேடையேறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு மகிந்த ராஜபக்ச தரப்பு பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்ததுடன், இலட்சக்கணக்கான ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பின்னர், இலங்கை ஜனாதிபதி மைத்திரிவபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்சவையும் இந்தக் கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான இந்த கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் பங்கேற்க மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே நாளை மறுநாள் நடக்கவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தியுள்ள மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட, சிறிலங்கா அதிபருக்கு குறிப்பிட்ட நாளில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதாலேயே இந்தக் கூட்டம் பிற்போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு பொருத்தமான நாளில் இந்தக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஜனாதிபதி  செயலகம் இந்த தகவலை முற்றாக நிராகரித்துள்ளது. அனுராதபுரத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பங்கேற்கும் திட்டம் ஏதும் மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கவில்லை என்றும் சிறிலங்கா அதிபர் செயலகம் கூறியுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தாலும், அவருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்வதில்லை என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவின்  நிலைப்பாடுகள் மகிந்த ராஜபக்ச தரப்பை குழப்பத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

இதனால் தான் அனுராதபுர கூட்டம் இடைநிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உண்மையிலேயே இடமளிக்கப்படுமா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. சிலவேளைகளில் அவ்வாறு போட்டியிட முடியாத நிலை எற்பட்டதால், மாற்று அணியாகப் போட்டியிடும் ஏற்பாடுகளை மகிந்த தரப்பு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே, எதிர்வரும் 13ஆம் நாள் வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் வரை நிச்சயமாக எதையும் கூற முடியாது என்பதாலேயே, மகிந்த ராஜபக்சவின் அனுராதபுர கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வரும் 13ஆம் நாளுக்குப் பின்னர் இந்தக் கூட்டம் நடத்தப்படும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.